அடுத்த ஜனாதிபதி தேர்தலில் மகிந்த மீண்டும் போட்டியிட முடியும்!

Report Print Steephen Steephen in அரசியல்

அரசியலமைப்பு சட்டம் திருத்தப்படவில்லை எனவும், மாற்றங்கள் மட்டுமே செய்யப்பட்டுள்ளதாகவும் முன்னாள் அமைச்சர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார்.

இதனால், முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க மற்றும் மகிந்த ராஜபக்ச ஆகியோர் அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட தடையில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

நுவரெலியாவுக்கு நேற்று விஜயம் செய்த சந்திம வீரக்கொடி ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே இதனை குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி பதவிக்கு மீண்டும் போட்டியிடுவது தொடர்பிலேயே பிரச்சினை ஏற்பட்டுள்ளது. 1978ம் ஆண்டு அரசியலமைப்புச் சட்டத்திற்கு அமைய முழுமையான அதிகாரங்களுடன் கூடிய ஜனாதிபதி தெரிவானார்.

19 வது திருத்தச்சட்டம் மூலம் அது சம்பந்தமான 30 பந்திகளை நீக்கி விட்டு மாற்றங்களை செய்து, புதிய பந்திகளை உள்ளடக்கினோம்.

இதனடிப்படையில், ஜனாதிபதி நாட்டின் தலைவர், அரசாங்கத்தின் தலைவர், முப்படை தளபதி, 5 ஆண்டுகளுக்கு பதவி வகிக்க முடியும். தற்போது உயிருடன் இருக்கும் சந்திரிக்கா பண்டாரநாயக்க, மகிந்த ராஜபக்ச ஆகியோர் 1978 ஆம் ஆண்டு அரசியலமைப்புச்சட்டத்திற்குரிய ஜனாதிபதியாக பதவி வகித்தனர்.

பிரதம நீதியரசர், நீதிபதிகள், சட்டமா அதிபர் உட்பட உயர் அதிகாரிகளை நியமிக்கும் அதிகாரம் இந்த ஜனாதிபதிக்கு இருந்தது.

அந்த ஜனாதிபதி அரசியலமைப்புச் சட்டத்தின்படி நாடாளுமன்றத்திற்கு பொறுப்புக் கூறவேண்டியதில்லை. பிரதமரை விலக்க முடியும் பிரதமரிடம் ஆலோசனை நடத்தாது அமைச்சர்களை நீக்க முடியும். தற்போதைய ஜனாதிபதிக்கு அந்த அதிகாரங்கள் இல்லை.

முன்னர் இருந்த ஜனாதிபதிகளுக்கு நாடாளுமன்றத்தை கலைக்கும் அதிகாரங்கள் இருந்தன. தற்போதைய ஜனாதிபதிக்கு நான்கரை ஆண்டுகளுக்கு நாடாளுமன்றத்தை கலைக்க முடியாது. அத்துடன் சுயாதீன ஆணைக்குழுக்கள் இருக்கின்றன எனவும் சந்திம வீரக்கொடி குறிப்பிட்டுள்ளார்.