இதனால்தான் தலைவர் பிரபாகரன் ஆயுதம் ஏந்தினார்: பொன்சேகாவிற்கு சிறீதரன் பதிலடி

Report Print Arivakam in அரசியல்

தமிழர்களும் தமது சொந்த மண்ணில் வாழவும், ஆளவும் விரும்புகிறார்கள் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார் .

பிரமந்தனாறு வட்டாரத்தின் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மூலக் கிளைத் தெரிவின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

இலங்கை இராணுவத்தின் முன்னாள் தளபதி அமைச்சர் சரத்பொன்சேகா அண்மையில் பெரும்பான்மை மக்கள் அதிகாரப் பரவலாக்கத்தை விரும்பவில்லை என்னும் கருத்தினை வெளியிட்டிருந்தார்.

தமிழர்கள்களாகிய நாம் இந்த மண்ணினுடைய பூர்வீக குடிகளாக வாழ்ந்து வருகின்றோம். இந்த மண்ணிலே ஆங்கிலேயரின் வருகைக்கு முன்பாக நாம் இந்த மண்ணிலே தனியான இராசதானிகளுடன் எம்மை நாமே ஆண்டவர்கள்.

சுதந்திரத்தின் பின்னர் இந்த நாட்டில் அடிமையாக நடத்தப்பட்டு வருகின்றோம். நாம் அடிமைகளாக நடத்தப்பட்டதை உணர்ந்தமையினால்தான் எமது தலைவர் பிரபாகரன் ஆயுதம் ஏந்தி எமது இனத்தின் அடிமைத்தனத்தை போக்க விளைந்தார்.

ஆயுதப் போராட்டத்தை எமது இளைஞர்கள் ஆரம்பிப்பதற்கு முன்பே எமது மக்கள் தமிழீழம் தான் தமிழர்களின் இறுதித்தீர்வு என 1977ஆம் ஆண்டின் பொதுத் தேர்தலின் போது மக்கள் வாக்களித்தார்கள்.

2009 ஆம் ஆண்டு யுத்தம் நிறைவுற்றதன் பின்னர் புலம்பெயர்ந்து வாழ்கின்ற எம்மவர்களிடம் நடத்தப்பட்ட வாக்களிப்பிலும் தமிழீழத்திற்காக வாக்களித்திருந்தார்கள்.

தனிநாடு கோருவதற்கு முழு உரிமையும் கொண்ட நாம் யதார்த்த நிலை உணர்ந்து ஒன்று பட்ட நாட்டுக்குள் எமக்குரிய அதிகாரங்களை கேட்கின்ற வேளையில் சிங்கள ஆட்சியாளர்கள் இவ்வாறான கருத்துக்களை வெளியிட்டு வருகின்றார்கள்.

பொன்சேகா, கோத்தபாய ராஜபக்ஷ போன்றோரினால் வெளியிடப்படும் இனவாதக் கருத்துக்களுக்கும் பதிலளிக்கும் வகையில் நாங்கள் எமது மண்ணில் எம்மை நாமே ஆள விரும்புகின்றோமா என எங்கள் மக்களிடத்தில் பொது வாக்கெடுப்பை நடத்திய பின் இவ்வாறான கருத்துக்களை வெளியிடத் தயாரா என குறிப்பிட்டுள்ளார்.

மேலதிக செய்திகள்- யது