மன்னாரில் தொல்பொருள் ஆராய்ச்சி திணைக்களத்தால் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ள முடியாத அவல நிலை

Report Print Dias Dias in அரசியல்

தொல்பொருள் ஆராய்ச்சி திணைக்களம் ஒரு இனம் சார்ந்த, ஒரு மதம் சார்ந்த, ஒரு திணைக்களமாக மன்னாரில் இயங்கிக் கொண்டு இருப்பதால் இங்குள்ள மக்கள், வீடுகள் அமைக்க முடியாத நிலைமைகள், விளையாட்டு மைதானங்கள் புனரமைக்க முடியாத நிலையிலேயே காணப்படுகின்றனர் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இ.சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளர்.

ஜனாதிபதி தேர்தல் நெருங்க நெருங்க அமைச்சர்களின் வருகை வடக்கு கிழக்கில் அதிகரித்து வருகின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

செமட்ட செவண என்னும் திட்டத்தின் கீழ் லூர்து நகர் என்ற பெயரில் 102வது மாதிரிக்கிராமம் வீடமைப்பு நிர்மானத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாஸவால் மன்னார் நானாட்டான் பிரதேசத்தில் உள்ள நறுவிலிக்குளம் கிராமத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,

அமைச்சர் சஜித் பிரேமதாஸ நாடாளுமன்றத்தில் தனித்துவமானவர் சகல நாடாளுமன்ற உறுப்பினர்களையும் உள்ளடக்கி தனது சேவையை செய்ய வேண்டும் என்ற உள்ளம் படைத்தவர்.

தற்போது இலங்கையை ஆட்சி செய்கின்ற கட்சிகள் ஆட்சியை பிடிப்பதற்கு ஒவ்வொரு கட்சிகள் ஒவ்வொரு பக்கத்தால் முயற்சி செய்துகொண்டிருக்கின்றன.

உண்மையில் வடக்கு கிழக்கு பகுதிகளுக்கு இந்த நாட்டினுடைய ஜனாதிபதி, பிரதமர் போன்றோரின் வருகை மிக கூடுதலாக இருக்கின்றது.

அதற்குக் காரணம் வருகின்ற ஜனாதிபதி தேர்தலில் வடக்குக் கிழக்கில் இருக்கின்ற வாக்குகள்தான் ஜனாதிபதியை நிர்ணயிக்கப் போகின்றது என்ற அடிப்படையில் தான் இந்த வரத்துக்கள் இருக்கின்றது. அமைச்சரே இந்த வீட்டுத்திட்டம் தங்களுடைய அமைச்சின் கீழ் வீடமைப்பு அதிகார சபையினால் வழங்கப்படுகின்றது அது உண்மையில் தேவை உள்ள மக்களுக்கு வழங்கப்படுகின்றது.

வடக்கு கிழக்கிற்கு ஐம்பதாயிரம் வீடுகள் வருகின்றது என 2017ம் ஆண்டு அரசாங்கம் அறிவித்திருந்தது. அதற்குரிய நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு இருபத்தையாயிரம் வீடுகளுக்கு அனுமதி அளித்து அமைச்சரவை பத்திரம் நிறைவேற்றப்பட்டு ஒரு வருடங்கள் ஆகியும் அந்த இருபத்தையாயிரம் வீட்டில் இன்னும் ஒரு வீட்டைக் கூட கட்டி முடிக்கவில்லை.

ஆனால் பத்திரிகைகளில் மட்டுமே வருகின்றது கடைசியில் வடக்குக் கிழக்கில் விசேட பேரவை ஒன்றை உருவாக்கி ஒரு வருடம் நடைமுறைப்படுத்தப்பட்ட திட்டங்களை இப்பொழுது அறிவிக்கின்றார்கள்.

ஆனால் வீட்டின் அபிவிருத்தி நிலை கைமாறிக்கொண்டிருக்கின்றது முதலொரு செயலாளரிடம் இருந்தது தற்போது வேறு அமைச்சிடம் கையளிக்கப்பட்டிருப்பதாக அறியப்படுகின்றது.

அமைச்சுகள் மாறினால் அந்த செயற்பாடுகளுடைய வேகம் குறையும் ஆகவே அமைச்சர்களே தாங்கள் அரசாங்கத்தில் முக்கிய அமைச்சராக இருக்கின்றீர்கள், அரசியல் பாராது எமது மக்களுக்கு வீடுகளை வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்வதோடு அதே நேரத்தில் அமைச்சர்கள் இந்த நறுவிலிக்குளம் கிராமத்திற்கு வந்திருக்கின்ற காரணத்தினால் இவ் விடயத்தை சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

மன்னார் மாவட்டத்திற்கான விளையாட்டு மைதானம் நறுவிலிக்குளத்தில் புனரமைக்கப்பட்டு வந்தது ஆனால் தற்போது அந்த வேலை இடைநிறுத்தப்பட்டிருக்கின்றது காரணம் கேட்டால் தொல்பொருள் ஆராய்ச்சி திணைக்களம் நிறுத்தி வைத்துள்ளது.

திருக்கேதீஸ்வரத்தில் மக்கள் குடியேற இயலாது, கேட்டால் தொல்பொருள் திணைக்களம். நானாட்டான் இராசமடுவில் வீட்டுத்திட்டம் கட்டமுடியாது, கேட்டால் தொல்பொருள் திணைக்களம். இதனால் கிடைக்கப் பெறுகின்ற வீட்டுத்திட்டங்களை தொல்பொருள் ஆராய்ச்சி திணைக்களம் தடைசெய்து வருகின்றது.

தொல்பொருள் ஆராய்ச்சி திணைக்களம் ஒரு இனம் சார்ந்த ஒரு மதம் சார்ந்த ஒரு திணைக்களமாகத்தான் அது தற்பொழுது இங்கே செயற்படுகின்றது.

இந்த மாவட்ட விளையாட்டு மைதானம் 2011ம் ஆண்டு முன்மொழியப்பட்டு தற்பொழுது இந்த அரசாங்கத்தினால் வேலைகள் ஆரம்பிக்கப்பட்டும் அந்த வேலை நிறுத்தப்பட்டுள்ளது.

ஆனால் இதே வேலைத்திட்டம் தென்பகுதி மாவட்டத்தில் ஒரு மாவட்ட விளையாட்டு மைதானம், இவ்வாறு தொல்பொருள் ஆராய்ச்சி திணைக்களத்தால் இவ்வளவு நீண்டகாலத்திற்கு நிறுத்தி வைக்க முடியுமா நிறுத்துவதற்கு அங்கிருக்கின்ற அமைச்சர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதற்கு விடுவார்களா ?

நாங்கள் பல தடவை கதைத்தும் அதற்குரிய தீர்வு வரவில்லை, விளையாட்டுத்துறை அமைச்சரிடம் கதைக்க வேண்டும், கலாச்சார அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவிடம் கதைக்க வேண்டும், என்று சொல்கின்றார்கள் அப்படி அவர்களிடம் கதைத்த போதும் நாங்கள் பார்க்கின்றோம் என்று சொல்கின்றார்கள்.

அத்துடன், இன்னும் வேலை நடைபெற்றதாக தெரியவில்லை இதே போன்று மாவட்டத்தில் இருக்கின்ற அபிவிருத்திகளை ஒவ்வொரு திணைக்களங்கள் தடைசெய்கின்ற நடவடிக்கை தொடர்ந்த வண்ணம் இருக்கின்றது.

வன ஜீவராசி திணைக்களம் இன்னுமொரு விடயத்திற்கு தடையாக இருக்கின்றது, அரசாங்கத்தின் ஒரு அமைச்சு எடுக்கின்ற முயற்சியை இன்னொரு அமைச்சு தடை செய்கின்றது.

தொல்பொருள் திணைக்களம் வன ஜீவராசிகளினால் தடையாக உள்ள மக்களுக்கான அபிவிருத்திகளை நடைமுறைப்படுத்த ஆவன செய்யுமாறு கேட்டுக்கொள்கின்றேன் என குறிப்பிட்டுள்ளார்.