த.தே.கூட்டமைப்பிலிருந்து வெளியேறியுள்ள வடக்கு முதலமைச்சர்? எந்த அணிக்கு போகப் போகிறார்

Report Print Thileepan Thileepan in அரசியல்

வடக்கு முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தனக்கென ஒரு வட்டத்தை வைத்துக் கொண்டு அதன் மூலமான ஆலோசனைகளுடன் செயற்படுவதால், அவர் த.தே.கூட்டமைப்பில் இருந்து வெளியேறியுள்ளதாக நான் கருதுகிறேன் என வட மாகாணசபை உறுப்பினர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் உள்ள வட மாகாணசபை உறுப்பினர் ப.சத்தியலிங்கத்தின் தாயகம் அலுவலகத்தில் வைத்து நேற்று மாலை விளையாட்டுக் கழகங்களுக்கான உதவித் திட்டங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

இந்த நிகழ்வின் நிறைவில் ஊடகவியலாளரொருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறுகையில்,

வட மாகாணத்தில் இருக்கின்ற 38 உறுப்பினர்களில், முதலமைச்சர் உட்பட 30 உறுப்பினர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை சார்ந்தவர்கள். ஆகவே முதலமைச்சர் புதிய ஒரு அணியாக செயற்படுவதாக இருந்தால் அவர் எந்த அணிக்கு போகப் போகிறார் என்பது எல்லாம் எமக்கு தெரியாத விடயம்.

அவர் கூட்டமைப்பில் இருந்து கொண்டே கூட்டமைப்புக்கு எதிராகவும் அல்லது கூட்டமைப்புடன் ஒத்து இயங்குகின்ற தன்மையில் இருந்தும் கடந்த மூன்று வருடங்களுக்கு முதலே வெளியேறிவிட்டார்.

தனக்கு என ஒரு வட்டத்தை வைத்துக் கொண்டு அந்த வட்டத்தின் ஆலோசனைகளுடன் செயற்படுவதால் அவர் கூட்டமைப்பில் இருந்து வெளியேறியுள்ள நிலமை உள்ளதாக நான் கருதுகிறேன்.

கூட்டமைப்பினுடைய மாகாணசபை அறுதிப் பெரும்பான்மையுடன் செயற்படுகின்ற இந்த சபையிலே தாங்கள் கூட்டமைப்பு இல்லை என்று சொல்லிக் கொண்டு அல்லது தாங்கள் கூட்டமைப்புக்கு வெளியே இருந்து செயற்படுவதாக சொல்லிக் கொண்டிருப்பவர்கள் அந்த பதவியில் இருப்பதற்கு தகுதியற்றவர்கள்.

அவர்கள் கூட்டமைப்பு இல்லை என்று சொன்னால் அவர்கள் கூட்டமைப்பினுடைய சபையிலே இருப்பது என்பதும், பதவி வகிப்பது என்பதும் அநாகரிகமானது என்று கருதுகிறேன்.

முதலமைச்சர் மாத்திரமல்ல, மாகாணசபை உறுப்பினர்களான ஐங்கரநேசன், அனந்தி சசிதரன் போன்றோர் தாங்கள் எந்தக் கட்சியும் இல்லை என்று சொல்கின்றார்கள். ஆனால் தேர்தலில் எந்த கட்சியும் இல்லாமல் அவர்கள் வாக்குக் கேட்டு மாகாணசபைக்கு வரவில்லை.

இவர்கள் அனைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிட்டு வந்தவர்கள். அதற்கு ஒரு படி மேலே சென்று ஐக்கரநேசன் சொன்னதாக ஒரு பத்திரிகை செய்தியை பார்த்தேன். அதில் கூட்டமைப்பு என்பது ஒரு கூழ் முட்டை என்றும். அடைகாப்பது பிரயோசனமற்றது என்றும் அவர் தெரிவித்துள்ளதாக பார்த்தேன்.

அப்படியென்றால் அவரும் கூழ் முட்டை தான். கூழ் முட்டைக்குள் தான் அவரும் இருக்கிறார். கூட்டமைப்பினுடைய அங்கத்தவராக தான் இன்றும் பதவியில் இருக்கிறார்.

நான் இன்று சொல்வதைக் கேட்டு சிலவேளை மாகாணசபை பதவியை அவர் தூக்கியெறியலாம். ஏனென்றால் மாகாணசபை நிறைவு பெறுவதற்கு இன்னும் குறிப்பிட்ட சில நாட்கள் தான் இருக்கின்றன.

இந்த மாகாணசபை திறம்பட செயற்படாமைக்கு மாகாணசபையினுடைய வழிகாட்டியாக இருக்கின்ற முதலமைச்சரே முழுப் பொறுப்பையும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

முதலமைச்சர் ஒரு புதிய அணியை உருவாக்குவதாக இருந்தால் அவர் யாருடன் புதிய அணியை உருவாக்கப் போகின்றார் என்ற வதந்திகள் இருக்கின்றன. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியுடன் சேரப்போவதாக சொல்கிறார்கள்.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியுடன் சேர்ந்தால் அவர்கள், ஈபிஆர்எல்எப் மற்றும் முன்னர் ஆயுத குழுக்களாக இருந்து தற்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் உள்ள புளொட், ரெலோ போன்ற கட்சிகளை உள்வாங்க கஜேந்திரகுமார் விரும்ப மாட்டார் என்ற செய்தியை பத்திரிகைகளில் காணக் கூடியதாக இருந்தது.

ஆகவே அந்த புதிய கூட்டு என்பது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிரான அல்லது தமிழரசுக் கட்சிக்கு எதிரான ஒரு குழுவாக இயங்குவதற்கு முயற்சிகள் எடுப்பதாக நாங்கள் அறிகிறோம்.

அப்படியானதொரு புதிய அணியின் ஊடாக முதலமைச்சர் வந்தாலும் மக்கள் அதற்குரிய தீர்ப்பை வழங்குவார்கள் என நான் நம்புகின்றேன் என குறிப்பிட்டுள்ளார்.