புலிகளை ஒழித்து இந்தியர்களின் மிகுந்த மன வேதனையை தணித்தவரே மஹிந்த! சுவாமி புகழாரம்

Report Print Shalini in அரசியல்

இலங்கைக்கு திடீர் விஜயம் மேற்கொண்டு மஹிந்தவை சந்தித்த பாரதிய ஜனதா கட்சி தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி தனது பயணம் குறித்து டுவிட்டரில் சில கருத்துக்களை பதிவிட்டுள்ளார்.

அதில், “இலங்கையின் தென்பகுதிக்கு சென்று முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவை சந்தித்து பேசியது மிகவும் மகிழ்ச்சி தரும் நிகழ்வாக இருந்தது.

விடுதலைப் புலிகள் இயக்கத்தை அடியோடு ஒழித்துக் கட்டுவது என்ற உறுதியான முடிவை எடுத்தவர் என்ற வகையில் அவர் பாராட்டுக்குரியவர்.

அதேபோல் ராஜீவ்காந்தியை விடுதலைப்புலிகள் படுகொலை செய்ததால் இந்தியர்கள் கொண்டிருந்த மிகுந்த வேதனையை தணித்தவரும் ஆவார்” என்று குறிப்பிட்டு உள்ளார்.

இலங்கைக்கு நேற்று விஜயம் மேற்கொண்டிருந்த பாரதிய ஜனதா கட்சி தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி தங்காலையில் உள்ள மஹிந்த ராஜபக்ஸவின் வீட்டிற்கு சென்றிருந்தார்.

இதன்போது மரணமடைந்த மஹிந்தவின் சகோதரன் சந்திர ராஜபக்ஸவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்.

தொடர்ந்து செப்டம்பர் மாதம் 12ஆம் திகதி புதுடில்லியில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக மஹிந்தவுக்கு அழைப்பு விடுத்திருந்தார்.

இதேவேளை, சுப்பிரமணியன் சுவாமியின் வருகை குறித்து மஹிந்த, “இவர் இலங்கையின் நீண்ட கால நண்பன். எப்போதுமே விடுதலைப்புலிகள் பயங்கரவாத அமைப்பிற்கு எதிராக தீவிரமாக பேசியவர்.அவர் எப்போதும் இலங்கையின் நலன் தொடர்பாக மனதளவில் மிகவும் அக்கறை கொண்டிருந்தார்.” என புகழாரம் சூட்டியிருந்தார்.

இதற்கு பதில் கூறும் வகையிலேயே மஹிந்தவை புகழ்ந்து சுவாமி பதிவிட்டுள்ளார்.