பிரபாகரனின் மரணம் குறித்து மனம் திறந்த ராகுல்காந்தி!

Report Print Murali Murali in அரசியல்

விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் மரணம் எங்களுக்கு மகிழ்ச்சியை தரவில்லை. மாறாக அது எங்களுக்கு வேதனையையே கொடுத்ததாக காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

ஜெர்மனிக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அவர், ஹம்பர்க் நகரில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு பேசிய போதே இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,

“எனது தந்தை ராஜூவ் காந்தியை கொலை செய்த விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் 2009ம் ஆண்டு கொல்லப்பட்டார். இது எங்களுக்கு மகிழ்ச்சியை தரவில்லை.

பிரபாகரனின் பிள்ளைகள் உள்ளிட்டவர்கள் இதன்போது பாதிக்கப்பட்டிருந்த நிலையில், வன்முறையை நன்கு உணரமுடிந்தது. எனது பாட்டி மற்றும் தந்தை ஆகியோர் கொல்லப்பட்டிருந்தார்கள்.

இதன்மூலம் நாங்கள் வன்முறைக்கு ஆளாகியிருந்தோம். நான் எனது அனுபவத்தில் இருந்து உண்மையை பேசுகின்றேன். வன்முறையிலிருந்து நாங்கள் முன்னேறுவதற்கு மன்னிப்பு ஒன்றே சிறந்த வழி. வேறு வழியும் இல்லை.

மன்னிப்பு வழங்குவதற்காக, நீங்கள் சரியாக என்ன நடந்தது, ஏன் அது நடந்தது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இதனை பலவீனம் என்று மக்கள் நினைக்கின்றனர். எனினும், உண்மையில் அதுவே சிறந்த வலிமை.

1991ம் ஆண்டு எனது தந்தை பயங்கரவாத தாக்குதலின்போது கொல்லப்பட்டார். 2009ம் ஆண்டு என் தந்தையை கொலை செய்தவர் கொல்லப்பட்டு கிடந்தார். இது குறித்து என் தங்கையிடம் கூறினேன்.

எங்கள் தந்தையை கொன்றவர் இறந்து கிடந்தார். இதனை நாங்கள் கொண்டாடியிருக்க வேண்டும். எனினும், நாங்கள் அப்படி செய்யவில்லை. பிரபாகரனின் மரணம் எங்களுக்கு வேதனையையே தந்தது.

பிரபாகரன் ஒரு மோசமான நபராக இருந்திருக்கலாம். எனினும், அவருக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட வன்முறையானது, என்னை போல் ஏனையவர்களையும் பாதித்திருக்கும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.