நாளை மகிந்தவுடன் கைகோர்க்கும் சம்பந்தன், ஹக்கீம்! மனோவும் ஆதரவு

Report Print M.M.Nilamdeen M.M.Nilamdeen in அரசியல்

மாகாண சபைகள் தேர்தலை, புதிய முறைமையின் கீழ் நடத்துவதற்குத் தேவையான தொகுதிகளைப் பிரிக்கும் எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் அறிக்கை, நாளை காலை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

அவ்வறிக்கையின் உள்ளடக்கம் தொடர்பில் விவாதிக்கப்பட்டதன் பின்னர், அவ்வறிக்கையை நிராகரிக்கவோ அல்லது ஏற்றுக்கொள்ளவோ முடியும்.

அதன் பின்னரே மாகாண சபைத் தேர்தலை எந்த முறைமையில் நடத்துவதென்பது தொடர்பில் தீர்மானிக்க முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.

மாகாண சபைத் தேர்தல்கள் ஒத்திவைக்கப்படுவதற்கு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி கடுமையான எதிர்ப்பை தெரிவிக்கின்றதுடன், இந்தத் தேர்தல் புதிய தொகுதி மற்றும் விகிதாசார முறைமைகளின் கீழ் விரைவில் நடத்தப்பட வேண்டும் என்பதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் எண்ணப்பாடு என தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், பிரபல அரசியல் ஆய்வாளர் நிலாம்டீன் இது தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையில்,

புதிய தேர்தல் மூலமாக சுதந்திரக்கட்சி இருந்த இடமும் இல்லாது படு தோல்வி கண்டுள்ளது.

ஆனாலும் புதிய தேர்தல் முறைதான் வேண்டும் என்று அதிபர் மைத்திரி அடம் பிடிப்பதன் நோக்கம் என்ன? தனது இரண்டு கண்கள் போனாலும் பரவாயில்லை முஸ்லிம்களின் ஒரு கண்ணாவது போகட்டும் என்ற நினைப்பில் உள்ளார் மைத்திரி.

இப்போது சொல்லுங்கள் முஸ்லிம்களின் வாக்குகளை பெற்று முஸ்லிம்களுக்கு விரோதமாக செயல்படுவது யார்? முஸ்லிம்களின் அரசியல் பலத்தை உடைக்க நினைப்பது யார்?

புதிய தேர்தல் முறைமையின் மூலமாக முஸ்லிம்களின் அரசியல் பலம் மிகவும் பின்தள்ளப்பட்டு அரசியல் அனாதையாகும் நிலை வந்துள்ளது. புதிய தேர்தல் முறைமை பற்றிய சாதகம் பாதகம் பற்றி எந்தவொரு சிறுபான்மை கட்சிகளும் அலசவில்லை.

கடந்த உள்ளூராட்சி தேர்தல் முடிவின் பின்னர்தான் இந்த தேர்தல் ஹக்கீம் கட்சிக்கு பாரிய தோல்வியைக் கொடுத்த பின்னர்தான் ஹக்கீம் விழித்துக் கொண்டார்.

அதன் பின்னர்தான் இந்த தேர்தல் முறைமையை எதிர்க்க துவங்கினார். ஹக்கீம் எதிர்ப்பின் பின்னர் பலன் கண்டுள்ளார். ஆரம்பத்தில் பிரதமர் ரணிலும் புதிய முறைமையில்தான் மாகாண தேர்தல் நடாத்தப்பட வேண்டும் என்று பிடிவாதமாக நின்றார்.

ஆனாலும் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ரணிலுக்கு ஹக்கீம் ஆதரவு வேண்டும் என்ற நோக்கிலும் ஹக்கீம் மகிந்த பக்கம் சாய்ந்து போவதாலும் ரணில் ஹக்கீமின் கோரிக்கைக்கு செவி சாய்க்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

இதேவேளை, இந்த தேர்தல் பழைய முறைமையின் கீழ் நடத்தப்பட வேண்டும் என்று ஹக்கீம், டக்ளஸ் தேவானந்தா, மனோகணேசன் ஆகியோர் அண்மையில் மகிந்தவை சந்தித்து ஆதரவு கோரியிருந்தனர். தான் ஆதரவு தருவதாக மகிந்தவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, எதிர்கட்சி தலைவர் இரா. சம்பந்தனிடம், ஹக்கீம் ஆதரவு கோரியுள்ளதாகவும் இருவருக்கும் இடையில் ஒரு சமரச இணக்கம் காணப்பட்டுள்ளதாகவும் அறிய வருகின்றது .

அத்துடன் பிரதமர் ரணிலும், ஹக்கீமின் கோரிக்கையை ஏற்றுள்ளதால் புதிய முறைமை தோல்வி காணும் நிலை வந்துள்ளது.

இந்த அறிக்கை விவாதம் அடுத்த வாரம் நடாத்தப்படும். இந்த அறிக்கை தோல்வி கண்ட பின்னர் பழைய முறைமை கொண்ட தேர்தல் நடாத்தப்பட வேண்டும் என்றாலும் ஒரு புதிய சட்டம் கொண்டு (மசோதா) வரப்பட வேண்டும்.

முன்னாள் அதிபர், இந்நாள் அதிபர் இருவரையும் நோக்கினால் முஸ்லிம்களுக்கு எதிரானவர் யார் என்பது புரியும் என குறிப்பிட்டுள்ளார்.