ஈழ மக்கள் விடயத்தில் இந்தியாவை பிழையாக வழிநடத்திய இந்திய அதிகாரிகள்!

Report Print M.M.Nilamdeen M.M.Nilamdeen in அரசியல்

தமிழ் நாட்டில் கடந்த2016ஆம் வருடம் ஏற்பட்ட பாரிய வெள்ளத்தின் போது தமிழ் நாட்டில் ஜமாஅத் அணி தொட்டு அங்கு பல வகையான முஸ்லிம் தொண்டர் அமைப்புகள் உயிரை பணயம் வைத்து சேவையில் ஈடுபட்டு வந்தார்கள்.

பள்ளி வாசல்களை முகாமாக மாற்றி மாற்று மத மக்களை அங்கு தங்க வைத்து அந்த மக்களுக்கு உணவு பரிமாறி நல்ல முறையில் அளப்பெரிய சேவை செய்து மாற்று மத மக்களால் பாராட்டப் பட்டார்கள். ஏன் தமிழ் நாடு அரசே புகழும் அளவுக்கு அவர்கள் சேவை அமைந்தது.

இப்போது கேரளா கண்டுள்ள மிகப்பெரிய வெள்ளம் மண்சரிவு புயல் போன்ற இயற்கை அழிவுகளில் சிக்கியுள்ள மக்களை மீட்கவும் நிவாரண பணிகளை செய்யவும் தமிழ் நாட்டில் இருந்து ஏராளமான நிவாரணப் பொருட்களுடன் மீட்பு பணிக் குழுவுடனும் பல முஸ்லிம் அமைப்புக்கள் களத்தில் இறங்கி கடந்த 7 நாட்களாக சேவை செய்து வருகின்றன.

ஆனால் இந்த முஸ்லிம் அணிகளின் சேவை குறித்து தமிழ் நாடு மற்றும் கேரளா ஊடகங்கள் முற்றாக மறைத்து வருகின்றது. எந்தவொரு தமிழ் ஊடகமும் முஸ்லிம் அமைப்புகளின் சேவைகளை சொல்லுவதாக இல்லை.

காரணம் முஸ்லிம்கள் என்றால் பயங்கரவாதிகள் என்ற ஒரு பிம்பத்தை மக்கள் மத்தியில் பரப்பி வரும் பிஜேபி, RSS மற்றும் பல இந்து அமைப்புக்கள் ஊடகத்தை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு இந்த சேவைகள் பற்றிய செய்திகளை படங்களை வெளியிட வேண்டாம் என்ற ஒரு அஜந்தாவை கொண்டுள்ளார்கள்.

கேரளத்தில் முஸ்லிம் அமைப்புக்கள் செய்து வரும் இந்த சேவைகள் மக்கள் மத்தியில் ஊடகங்கள் வாயிலாக செல்லுமானால் ஒட்டு மொத்த இந்தியாவிலும் மக்கள் மத்தியில் மாற்றம் வரும்.

முஸ்லிம்கள் மீது கொண்டுள்ள தப்பான பார்வை விலகி இந்து முஸ்லிம் ஒற்றுமை வந்தால் அல்லது முஸ்லிம் இந்து சண்டை முரண்பாடுகள் இல்லாது போனால் பிஜேபி ஆட்சி தொடர முடியாது என்பது இந்த இந்து அமைப்புகளுக்கு தெரியும்.

அதனால் முஸ்லிம்கள் பற்றிய நல்ல வகையான செய்திகள் எந்தவொரு ஊடகத்திலும் வந்து விடக் கூடாது என்ற ஒரு உத்தரவு உள்ளது.

ஆனால் அவைகளையும் மீறி இரண்டொரு செய்திகள் தமிழ் நாட்டு வெள்ள அழிவின் போது வந்தது. முஸ்லிம்கள் என்றால் பயங்கரவாதிகள் பாகிஸ்தான் ஆதரவாளர்கள் என்ற ஒரு தப்பான புரிதலை பிஜேபி அரசு இந்தியாவில் விதைத்து வைத்துள்ளது.இதே போன்றுதான் ஈழத் தமிழர்கள் மீதும் இந்தியா ஒரு தப்பான எண்ணத்தைக் கொண்டுள்ளது.

கலைஞர் ஆட்சியில் முஸ்லிம்கள் மீதும் சிறுபான்மை மக்கள் மீதும் தாழ்த்தப்பட்ட சமூகத்தின் மீதும் ஒரு கரிசனை கொண்டிருந்தார் என்பதை யாரும் மறுக்க மறைக்க முடியாது.

ஆனால் ஜெயாவின் ஆட்சிகாலத்தில்தான் முஸ்லிம்கள் சிறுபான்மை மக்கள் மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களை புறக்கணித்த ஆட்சியே செய்து வந்தார். ஆனாலும் தமிழ் நாட்டுக்குள் பிஜேபி நுழைய முடியாதவாறு ஒரு திண்டுக்கல் பூட்டு போட்டிருந்தார்.

இவர் இறந்த பின்னர்தான் தமிழ் நாட்டில் பிஜேபி ஆதிக்கம் அதிகரித்துள்ளது. அந்த அதிகரிப்பு அடுத்து வரும் லோக் சபா தேர்தலுக்கு முன்னர் ஒரு மதக்கலவரம் நடந்து விடுமோ என்ற அச்சம் ஆய்வாளர்கள் மத்தியில் உள்ளது.

தமிழ் நாடு என்பது வந்தோரை வாழவைக்கும் எங்கள் தொப்புள்கொடி உறவுகள் கொண்ட நாடு, இந்தியா என்பது எங்கள் அன்னை தேசம். அன்னைக்கு நாங்கள் ஒரு போதும் துரோகம் செய்ய மாட்டோம்.

டெல்லியில் கொள்கை வகுப்பாளர்களாக இருக்கும் கேரளத்து அதிகாரிகள் தொட்டு ஆந்திரா கர்நாடகா அதிகாரிகள் இந்திய அரசை பிழையாக நடத்திக் கொண்டு இன்னும் இன்னும் இந்தியாவை அழிவுப் பாதைக்கு இட்டுச் செல்கின்றார்கள்.

ஈழத்து மக்கள் விடயத்திலும் இந்த அதிகாரிகளே இந்திய நடுவண் அரசை பிழையாக வழி நடத்தினார்கள். அதற்கு சில தமிழ் ஊடகங்களும் ஆதரவு தெரிவித்து ஈழ தமிழர்களின் உண்மை நிலவரத்தை வெளிக்காட்டாமல் மறைத்து வந்தார்கள்.

நக்கீரன், ஜூனியர் விகடன் போன்ற தமிழ் உணர்வு கொண்ட சஞ்சிகைகள் மட்டுமே ஈழத்து நிலைமைகளை தமிழ் நாட்டுக்கு காட்டியது புரிய வைத்தது.

இன்று ஈழத்து தமிழ் மக்களை எதிரிகளாக பிழையாக நினைத்து இன்று எங்கள் அன்னையின் பரம எதிரியான சீனா சிங்கள தீவில் அன்னை தேசத்தைக் கண்காணிக்கும் அளவுக்கு வந்து விட்டான். ஈழத்தின் வடக்கின் பல நிலப் பரப்புகளை சீனா குத்தகைக்கு பெறும் நிலை வந்துள்ளது.

ஈழத் தமிழன் ஒரு போதும் இந்தியாவுக்கு எதிரியே கிடையாது, அன்னைக்கு ஒரு போதும் ஈழத் தமிழன் துரோகம் செய்ய மாட்டான் என்பதை ஏன் இந்திய ஊடகங்கள் சொல்ல மறுக்கின்றது?

ராஜீவ்காந்தி விடயத்தில் அது ஒரு கசப்பான விடயம் என்று எப்போதோ புலிகள் சொல்லி விட்டார்கள், அதை மறப்போம்.

இந்தியாவின் பரம எதிரி சீனா தொடர்ந்து ஈழத்திலும் அகலக்கால் பதிப்தை இந்திய ஊடகங்கள் விரும்புகின்றதா?

இந்திய ஊடகங்கள் சரியாக ஊடக தர்மத்தை செய்தாலே இந்தியா நேரான பாதையில் செல்லும். அன்னையின் அரவணைப்பில் ஈழத்து மக்கள் ஆசைப்படும் மக்களில் நானும் ஒருவன் .. 'நெற்றிக் கண்ணை திறந்தாலும் குற்றம் குற்றமே'