புலிகளை சேர்ந்தவர்கள் என தெரிவித்து கொலை செய்யப்பட்ட இளைஞர்கள்! சுமந்திரன் தெரிவித்துள்ள விடயம்

Report Print Rakesh in அரசியல்

விடுதலைப் புலிகளை சேர்ந்தவர்கள் என தெரிவித்து இளைஞர்கள் காட்டிக் கொடுக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட போது, தப்பி வந்தவர்களை கொழும்பு இந்துக் கல்லூரியில் பராமரித்து வந்தவர்களில் நானும் ஒருவன் என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறுகையில்,

சமஷ்டி என்றால் என்னவென்று தெரியாத பலர் பல கருத்துக்களை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். நான் எனது விளக்கத்தில் தெளிவாக பல விடயங்களை சொல்லியிருக்கின்றேன்.

சமஷ்டி குணாதிசயங்கள் அடங்கிய அரசமைப்பு சட்டத்தை தான் நாங்கள் ஏற்றுக் கொள்வோம் என்பது எங்கள் நிலையான கொள்கை. சமஷ்டி கட்டமைப்பிலான என்று எங்கள் தேர்தல் விஞ்ஞாபனத்தில் நாங்கள் சொல்லியிருக்கின்றோம்.

சமஷ்டி பெயருள்ள அரசமைப்பு என்று நாங்கள் எங்கேயும் சொன்னது கிடையாது. சமஷ்டி பெயர் இருக்க வேண்டுமா? இல்லையா? என்பது பற்றி தெளிவாக எங்கள் மக்களுக்குப் பல தடவைகள் சொல்லியிருக்கிறேன்.

எங்கள் பங்காளி கட்சித் தலைவர்களும் இருந்த பல கூட்டங்களிலேயே நாங்கள் இதைச் சொல்லியிருக்கின்றோம். முதல் தடவையாக சமஷ்டியைப் பற்றி நான் சொன்ன விடயமல்ல இது.

நான் நூறு தடவை பல இடங்களில் பெயர்ப்பலகை தேவையில்லை என்றும், உள்ளடக்கம் தேவை என்றும், சமஷ்டிக் குணாதிசயம் என்ன என்றும் சொல்லயிருக்கின்றேன்.

அப்படியிருக்கையில் பங்காளி கட்சி தலைவர்களோ அல்லது விமர்சிக்கின்ற வேறு எவரோ சமஷ்டி குணாதிசயங்கள் என்னவென்று சொல்லும் அறிவு உண்டா என்பது எனக்குத் தெரியாது என கூறியுள்ளார்.

அத்துடன், வட மாகாணத்தின் கல்வி அமைச்சர் என்று சொல்லிக் கொள்ளும் ஒருவர் சுமந்திரன் இப்படி சொன்னது 70 ஆண்டுகளுக்கு செய்யும் துரோகம் என்று சொல்லியிருக்கின்றார்.

அவருடைய கட்சி, வீதி வீதியாக இளைஞர்களை பிடித்து சென்று அவர்கள் விடுதலைப் புலிகளைச் சேர்ந்தவர்கள் என காட்டிக் கொடுத்துக் கொலை செய்த காலங்களில் அப்படி பிடிபடாமல் கொழும்புக்கு வந்தவர்களை கொழும்பு இந்துக் கல்லூரியில் பாராமரித்து வந்தவர்களில் நானும் ஒருவன்.

நான் எந்த வேளையிலும் எந்தச் சந்தியிலும் முகமூடி அணிந்து கொண்டு எவரையும் காட்டிக் கொடுக்கவில்லை. அந்தக் கைங்கரியத்தைச் செய்தவர்கள் இப்போது எனக்குத் துரோகிப் பட்டம் சூட்டுவதற்கு துணிந்திருக்கின்றார்கள்.

அப்படியிருந்தும் நான் எவரையும் துரோகி என்ற வார்த்தையால் இதுவரை வர்ணித்தது இல்லை. ஆகையால் அவர் குறித்து நான் எதுவும் சொல்ல விரும்பவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers