விஜயகலா குற்றவாளியானால் கிடைக்கப்போகும் தண்டனைகள் என்ன தெரியுமா?

Report Print Shalini in அரசியல்

விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த முன்னாள் இராஜாங்க அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான விஜயகலா மகேஸ்வரனுக்கு எதிராக வழக்கு தொடருமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

குற்றவியல் சட்டத்தின் 120ஆம் சரத்துக்கு அமைய குற்றமிழைத்துள்ளார் எனவும், அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் சட்டமா அதிபர் அறிவுறுத்தியுள்ளார்.

இந்த நிலையில் விஜயகலா மகேஸ்வரனுக்கு எதிராக, அரசியல் யாப்பின் 157ஆம் இலக்க ஏ பிரிவின் 3ஆம் சரத்துக்கு அமைய மேன்முறையீட்டு நீதிமன்றில் வழக்கு தொடரப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி எந்த ஒரு நபரும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ, இலங்கைக்கு உள்ளேயோ வெளியிலோ, இலங்கையில் தனி நாட்டை உருவாக்குவதற்கு ஆதரவளிக்கவோ, கருத்துரைக்கவோ, பிரச்சாரம் செய்யவோ, நிதியளிக்கவோ, ஊக்குவிக்கவோ, ஆலோசனை வழங்கவோ முடியாது.

அவ்வாறு குற்றம் செய்பவர்கள் மேன்முறையீட்டு நீதிமன்றில் வழக்கு விசாரணையின் அடிப்படையில் தண்டிக்கப்பட வேண்டும்.

குற்றவாளிக்கு குறிப்பிட்ட காலத்துக்கு 7 வருடங்களுக்கு மேற்படாத வகையில் குடியுரிமை பறிக்கப்படலாம்.

அத்துடன் குற்றமிழைக்கின்றவரின் அசையும் மற்றும் அசையா சொத்துக்களை ஸ்தம்பிக்க செய்யவும் இயலும்.

எனினும் இதனை மேன்முறையீட்டு நீதிமன்றம் அவசியப்பாட்டின் அடிப்படையில் தீர்மானிக்கும்.

அந்த வகையில் விஜயகலா மகேஸ்வரன் குற்றவியல் சட்டத்தின் 120ஆம் சரத்துக்கு அமைய குற்றமிழைத்துள்ளார் என சட்டமா அதிபர் அறிவித்துள்ள நிலையில், அரசியல் யாப்பின் 157ஆம் இலக்க ஏ பிரிவின் 3ஆம் சரத்துக்கு அமைய மேன்முறையீட்டு நீதிமன்றில் வழக்கு தொடரப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு வழக்கு தொடர்ந்து, விஜயகலா குற்றவாளியாக அறிவிக்கப்பட்டால் இவ்வாறான தண்டனைகள் விதிக்கப்படலாம் என குறிப்பிடப்படுகின்றது.

Latest Offers