கொழுந்து விடும் சமஷ்டி அரசியல்!

Report Print Karthik in அரசியல்

காலியில் நடந்த, புதிய அரசியலமைப்பு யோசனை குறித்து விளக்கமளிக்கும் கூட்டம் ஒன்றில் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் வெளியிட்டதாகக் கூறப்படும் கருத்து பெரும் சர்ச்சையை தோற்றுவித்திருக்கிறது.

தமிழ் மக்களுக்கு சமஷ்டி தேவையில்லை என்றும், 13வது திருத்தச் சட்டத்தை விட சற்று கூடுதலான அதிகாரங்களையே அவர்கள் கோருவதாகவும் சுமந்திரன் அந்தக் கூட்டத்தில் கூறியதாக செய்திகள் வெளியாகியிருந்தன.

எனினும், அவர் யாழ்ப்பாணத்தில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில், தாம், தமிழ் மக்களுக்கு சமஷ்டி தேவையில்லை என்று கூறவில்லை என்றும், சமஷ்டி என்ற பெயர் பலகையில் தொங்கிக் கொண்டிருக்க தேவையில்லை என்றே குறிப்பிட்டதாகவும் தெரிவித்திருந்தார்.

தாம் சார்ந்த தமிழரசுக் கட்சியினது கொள்கை சமஷ்டியை அடிப்படையாகக் கொண்டது என்றும் அதிலிருந்து விலக முடியாது என்றும் சுமந்திரன் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான விரிசல், உச்சக்கட்டத்தை அடைந்திருக்கும் சூழலில், விக்னேஸ்வரனின் முன்னாள் மாணவனாகவும், தற்போதைய பிரதான அரசியல் எதிரியாகவும் இருக்கும் சுமந்திரன், சமஷ்டி பற்றிக் கூறிய கருத்து இன்னும் எரியும் நெருப்பில் எண்ணெயை வார்த்திருக்கிறது.

முதலமைச்சர் விக்னேஸ்வரன் மற்றும் அவரது பக்கத்தில் இருக்கின்ற சுரேஸ் பிரேமச்சந்திரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் போன்றவர்கள், சுமந்திரனின் கருத்தை வலுவாகக் கண்டித்தும், கூட்டமைப்பு தமிழ் மக்களை ஏமாற்றி விட்டது, துரோகம் செய்து விட்டது என்றும் அறிக்கை வெளியிட்டு வருகின்றனர். செய்தியாளர் சந்திப்புகளை நடத்தி வருகின்றனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள், முதலமைச்சர் விக்னேஸ்வரனுடன் பகிரங்க அரசியல் மோதலில் ஈடுபடும் துணிச்சல் கொண்டவராக சுமந்திரன் தான் இருக்கிறார். எனவே அவரை வறுத்தெடுக்க கிடைத்திருக்கின்ற வாய்ப்பை முதலமைச்சரின் தரப்பிலுள்ளவர்கள் நன்றாகவே பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

அடுத்து நடக்கப் போகும் தேர்தல்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராகவும், சுமந்திரனுக்கு எதிராகவும், முதலமைச்சரின் தரப்பிலுள்ளவர்கள் இந்த துருப்புச்சீட்டை வைத்து, நன்றாகவே பிரசாரம் செய்வார்கள் என்பதிலும் சந்தேகமில்லை.

சமஷ்டி தேவையில்லை என்று கூறவில்லை என சுமந்திரன் மறுத்திருந்தாலும், சமஷ்டி என்ற விடயத்தில், அவர் வெளிப்படுத்திய விடயங்கள், அவருக்கு எதிரான அரசியல்வாதிகளுக்கு சாதகமாக அமைந்திருக்கிறது என்பதில் சந்தேகமில்லை.

புதிய அரசியலமைப்பு உருவாக்க விடயத்தில் இருந்தே, சமஷ்டி விடயத்தில் சுமந்திரன் பல்வேறு சந்தர்ப்பங்களில் விமர்சனங்களுக்கு முகம் கொடுத்து வந்திருக்கிறார்.

ஒற்றையாட்சி, சமஷ்டி போன்ற சொற்களுக்கு அவர் அளிக்க முயன்ற விளக்கங்களும், அதற்குக் காரணம். எவ்வாறாயினும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூறப்பட்டிருந்த சமஷ்டியை விட்டு விலகி, ஒரு அரசியலமைப்பை உருவாக்குவதில் சுமந்திரன் கணிசமாகவே பங்களித்திருக்கிறார்.

அத்தகைய குற்றச்சாட்டு வரும்போதெல்லாம் அவர், தன்னைக் காத்துக் கொள்வதற்கு, சமஷ்டி என்ற பெயர்ப் பலகை முக்கியமல்ல, அதன் உள்ளடக்கம் தான் முக்கியம் என்ற கவசத்தைப் பயன்படுத்தி வந்திருக்கிறார்.

அதாவது சமஷ்டி முறையில் உள்ளது போன்ற அதிகாரப்பகிர்வு தான் முக்கியமே தவிர, சமஷ்டி என்ற அடையாளம் தேவையில்லை என்று அவர் நியாயப்படுத்தி வந்திருக்கிறார்.

புதிய அரசியலமைப்பு வரைவில் ஆட்சி முறை பற்றிய பதங்கள் பெரும்பாலும் தவிர்க்கப்பட்டிருக்கின்றன. அந்த விடயத்தில் சுமந்திரனின் பங்களிப்பு முக்கியமானது.

ஆனால், அவ்வாறு பெயர்ப்பலகை இல்லாத அதிகாரப்பகிர்வு சமஷ்டிக்கு இணையானதாக இருக்குமா என்றால், அதுவுமில்லை.

சமஷ்டி என்ற பெயர்ப் பலகையில் தொங்கிக் கொண்டிருக்க வேண்டியதில்லை என்று, சுமந்திரன் கூறினாலும், அத்தகைய ஒரு தீர்வை ஏற்க சிங்களத் தலைமைகள் தயாராக இல்லை என்பதே உண்மை.

அதேவேளை, புதிய அரசியலமைப்பு 13 ஆவது திருத்தச்சட்டத்திலும் சற்று அதிகமான அதிகாரப் பகிர்வை உள்ளடக்கியதாக இருந்தால் போதும் என்ற வகையில் சுமந்திரன் கருத்து வெளியிட்டது உண்மையானால், நிச்சயமாக அவரது கட்சியின் சமஷ்டி பற்றிய கொள்கை கேள்விக்குரியதே.

சமஷ்டி என்பதை பகிரங்கமாக வெளிப்படுத்துவதில்லை என்று சுமந்திரன் ஏற்கனவே கூறி விட்டார். ஆனால் அதில் உள்ள அடிப்படை அம்சங்களை விட்டுக்கொடுக்க முடியாது என்றும் அவரே கூறியிருந்தார்.

அவ்வாறாயின் புதிய அரசியலமைப்புக்கான வரைவு, சமஷ்டி முறையில் உள்ள அதிகாரப் பகிர்வை ஒத்ததாகவே இருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு இருக்கிறதா என்றால் அதுவும் இல்லை.

காலியில் நடந்த கருத்தரங்கிலும் சரி, தெற்கில் நடக்கும் கருத்தரங்குகளிலும் சரி, சுமந்திரன் மற்றொரு விடயத்தை கூறி வருகிறார். அதாவது, புதிய அரசியலமைப்பு தமிழ் மக்களின் பிரச்சினைகளை முழுமையாகத் தீர்க்காது, அவர்களின் அபிலாஷைகளை முற்றிலுமாக நிறைவேற்றாது என்பதே அது.

அவ்வாறாயின், சமஷ்டியும் இல்லாத- தமிழ் மக்களின் பிரச்சினைகளையும் முற்றிலுமாக தீர்க்காத, அவர்களின் அபிலாஷைகளையும் நிறைவேற்றாத புதிய அரசியலமைப்பு எதற்காக என்ற நியாயமான கேள்வி இருக்கிறது.

இப்போது, உள்ளதை விட முன்னேற்றகரமான ஒரு அரசியலமைப்பு என்ற வாதம் முன்வைக்கப்பட்டாலும், அது தமிழ் மக்கள் தமது அபிலாஷைகளைக் கைவிட்டு விட்டார்கள் என்ற வாதத்துக்குத் துணை போகுமானால் பேராபத்தாக அமையும்.

அதாவது, சமஷ்டி என்ற பெயர்ப்பலகையும் இல்லாத- சமஷ்டியின் பண்புகளை ஒத்த அதிகாரங்களும் இல்லாத ஒரு வெற்றுக் கூட்டுக்கு தமிழ் மக்கள் இணங்கி விட்டார்கள், அதனை ஏற்றுக்கொண்டு விட்டார்கள் என்ற கற்பிதத்துக்கு காரணமாகி விடும்.

சுமந்திரனைப் பொறுத்தவரையில், யதார்த்த அரசியலை அதிகம் பேசுகிறார் என்பதில் சந்தேகமில்லை. தற்போதுள்ள சூழலில் சமஷ்டி அரசியல் யாப்பை உருவாக்க முடியாது.

அதேவேளை, சமஷ்டித் தீர்வு இல்லாமல் தமிழ் மக்களைத் திருப்திப்படுத்தவும் முடியாது. எனவே இந்த இரண்டுக்கும் நடுவே, அங்குமிங்கும் நெகிழ்ந்து ஒரு அரசியல் யாப்பை உருவாக்குவதே சாலப்பொருத்தம் என்று அவர் நினைக்கிறார்.

இத்தகைய ஒரு நழுவலான நிலையை தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்வார்களா- அதனை அங்கீகரிப்பார்களா? இதனை எந்த அரசியல்வாதியும் முடிவு செய்ய முடியாது. மக்களே தீர்மானிக்க வேண்டிய நிலையில் இருக்கிறார்கள்.

எது எவ்வாறாயினும், ஒரு காலத்தில் தனிநாடு கோரிய தமிழ் மக்கள், தமது பிரச்சினைகளுக்கு சமஷ்டி மூலமே தீர்வு காண முடியும் என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறார்கள்.

காலியில் போய் சுமந்திரன், சமஷ்டி வேண்டாம் என்று கூறியிருந்தாலும், கூறியிருக்கா விட்டாலும், சமஷ்டி வேண்டாம் என்று முடிவு செய்யும் அதிகாரத்தை தமிழ் மக்கள் அவருக்கு அளித்திருக்கவில்லை.

அதேவேளை, சமஷ்டி தான் தீர்வு, அதற்கு இம்மியளவும் விட்டுக் கொடுக்க முடியாது என்ற நிலையில் இருக்கும் தரப்புகள் ஒன்றும், யோக்கியமானவை என்றும் எடுத்துக் கொள்ள முடியாது.

விடுதலைப் புலிகள் தனிநாட்டை உருவாக்குவதற்கான ஆயுதப் போராட்டத்தை நடத்தினார்கள். அவர்களைப் போலவே மேலும் பல தமிழ் இயக்கங்கள் ஆயுதங்களை ஏந்தின. ஆனால், புலிகளால் மட்டும் தான் அதனை தொடர்ந்து நடத்த முடிந்தது.

தனிநாட்டுக்கான கட்டுமானங்களை உருவாக்கி, நடைமுறை அரசு ஒன்றைக் கொண்டு நடத்தவும் முடிந்தது. அதாவது தனிநாடு தான் தீர்வு என்பதை செயலிலும் காட்டுவதில் அவர்கள் உறுதியாக இருந்தார்கள்.

ஆனால், சமஷ்டி தான் தீர்வு என்று ஒற்றைக் காலில் நிற்கின்ற தமிழ் தரப்புகள் எவற்றிடமுமே, அதனை அடைவதற்கான மூலோபாயமோ, செயற்திட்டங்களோ கிடையாது.

தேர்தல் மேடைகளிலும், ஊடக மாநாடுகளிலும், அறிக்கைகளிலும் மட்டும் தான், சமஷ்டியில் பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கிறார்களே தவிர, சமஷ்டி தீர்வு ஒன்றை எட்டுவதற்கான சாத்தியமான வழிமுறையை கண்டறியவும் அவர்கள் தயாராக இல்லை.

தமிழ் மக்கள் சமஷ்டித் தீர்வைத் தான் வலியுறுத்துகிறார்கள். அதனையே விரும்புகிறார்கள் என்பதில் சந்தேகம் கொள்ள வேண்டியதில்லை. ஆனாலும், அதனையே அரசியல் வியாபாரமாக மாற்றுவதில் தான் தமிழ் அரசியல்வாதிகள் உள்ளனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் சரி, ஏனைய தரப்புகளும் சரி இந்த விடயத்தில், பெரிதாக வேறுபட்டிருக்கவில்லை. சமஷ்டி என்ற கோஷத்தை வைத்து தமிழ் மக்களின் உணர்வுகளோடு விளையாடும் அரசியல் தான் முன்னெடுக்கப்படுகிறது.

இன்னும் எவ்வளவு காலத்துக்குத் தான் இந்த நிலை தொடரப் போகிறது என்று தெரியவில்லை. ஆனால், வரும் காலத்தில் அடுத்தடுத்து தேர்தல்கள் நடக்கும் என்பதால், சமஷ்டி அரசியல், உணர்ச்சி அரசியல் எல்லாமே கொளுந்து விட்டு எரியப் போகின்றன.

எரியும் நெருப்பில் எண்ணெயை வார்ப்பதற்கு அரசியல்வாதிகள் தயாராக இருப்பார்கள். ஏனென்றால், அந்த நெருப்பில் தான் அவர்கள் எப்போதும் குளிர்காய்ந்து வருகிறார்கள்.

Latest Offers