கோத்தாவிற்கு வெளிநாடு செல்லத் தடை

Report Print Shalini in அரசியல்

முதலாம் இணைப்பு..

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ சற்றுமுன் விசேட மேல் நீதிமன்றில் முன்னிலையாகியுள்ளார்.

தங்காலை வீரகெட்டிய மெதமுலன டி.ஏ.ராஜபக்ஸ நினைவுத்தூபி மற்றும் அருங்காட்சியகம் என்பவற்றை உருவாக்க 33 மில்லியன் அரசாங்க பணம் மோசடியாக பயன்படுத்தப்பட்டமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் கோத்தபாய மீது சுமத்தப்பட்டுள்ளன.

இது தொடர்பான விசாரணைகளுக்காக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ உள்ளிட்ட 7 பேரை இன்றைய தினம் விசேட மேல் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு கடந்த மாதம் 27ஆம் திகதி அழைப்பாணை விடுக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து குறித்த வழக்கு விசாரணைகளுக்காக கோத்தபாய ராஜபக்ஸ சற்றுமுன் விசேட மேல் நீதிமன்றில் முன்னிலையாகியுள்ளார்.

இரண்டாம் இணைப்பு..

கோத்தாவிற்கு வெளிநாடு செல்லத் தடை!

நிதிமோசடி குற்றச்சாட்டு தொடர்பில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ உள்ளிட்ட 7 பேருக்கும் வெளிநாடு செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த கால ஊழல் மோசடி குறித்த விசாரணைகளுக்காக தாபிக்கப்பட்டுள்ள விசேட மேல் நீதிமன்றில் இன்று கோத்தபாய உள்ளிட்ட ஏழு பேரும் ஆஜராகினர்.

இதன்போது அவர்களுக்கு அரச சொத்துக்கள் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட குற்றப் பத்திரிகைகள் நீதிமன்றில் கையளிக்கப்பட்டுள்ளன.

அதனையடுத்து, சந்தேகநபர்கள் தலா 100,000 ரூபாய் ரொக்கப் பிணை மற்றும் தலா ஒரு மில்லியன் ரூபாய் சரீரப் பிணைகளில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த வழக்கு எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 9ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.