தாயகம் திரும்பியோர் மீள்குடியேற வன இலாகாவினர் தடையாகவுள்ளனர்: ஜி.ரி.லிங்கநாதன் குற்றச்சாட்டு

Report Print Thileepan Thileepan in அரசியல்

வவுனியா, வடக்கு காஞ்சிரமோட்டை கிராமத்தில் இந்தியாவில் இருந்து திரும்பியோர் மீள்குடியேறுவதற்கு வன இலாகாவினர் தடை விதித்துள்ளதாக வடக்கு மாகாணசபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன் தெரிவித்துள்ளார்.

காஞ்சிராமோட்டை பகுதி மக்களை சந்தித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

வவுனியா வடக்கு, நெடுங்கேணி பிரதேச செயலகத்திற்குட்பட்ட காஞ்சிரமோட்டை கிராமமானது 300 ஆண்டுகளுக்கு முற்பட்ட பழைய பூர்வீகமான கிராமம்.

அது மட்டுமின்றி அதன் அயல் கிராமங்களான காட்டு பூவரசங்குளம், நாவலர் பண்ணை கிராமங்களில் 1977ம் ஆண்டு தென்னிலங்கையில் நடைபெற்ற வன்முறை காரணமாக இடம் பெயர்ந்த 300 தமிழ் குடும்பங்களை காந்தீயம் அமைப்பினர் குடியேற்றியிருந்தனர்.

கடந்த 1987ஆம் ஆண்டு நாட்டின் வன்முறை காரணமாக சில கிராம மக்கள் காணாமல் போன சம்பவத்தையடுத்து, அக்கிராமங்களிலுள்ள மக்கள் அச்சம் காரணமாக உள்நாட்டிலும் இந்தியாவிற்கும் இடம்பெயர்ந்திருந்தனர்.

இறுதி யுத்தம் முடிவடைந்து 2009ம் ஆண்டுக்கு பிற்பட்ட காலத்தில் வவுனியா வடக்கு பிரதேச செயலகத்தினால் ஒன்பது குடும்பங்கள் மீள் குடியேற்றம் செய்யப்பட்டனர்.

அடிப்படை வசதிகள் அற்ற நிலையில் ஆறு குடும்பங்கள் வாழ முடியாத நிலைமையில் கிராமத்தை விட்டு சென்றுவிட்டதன் பின்னர் மூன்று குடும்பங்கள் கடந்த ஒன்றரை வருடங்களாக மின்சார வசதிகள் அற்ற நிலையிலும் காட்டு மிருகங்களின் அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் தொடர்ந்து வசித்து வந்தனர்.

அத்துடன், அண்மையில் இந்தியாவிலிருந்து வருகை தந்திருந்த 37 குடும்பங்கள் காஞ்சிரமோட்டை கிராமத்தில் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட போதும் வன இலாகா திணைக்களம் அம்மக்களின் காணிகளை வன இலாகாவிற்கு சொந்தமானது என தெரிவித்து அவர்களுக்கான அனுமதியை வழங்க மறுத்து வருகிறார்கள்.

இதன் காரணமாக காஞ்சிராமோட்டையில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன் மீள் குடியேறிய மக்கள் பெரும் சிரமங்களை அனுபவித்து வருவதுடன், அம்மக்களுக்கு நீதியை பெற்றுக்கொடுக்க நீதிமன்றத்தை நாடவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers