எதிர் தரப்பினரை பழிவாங்கும் அரசாங்கம்! கோத்தபாய குற்றச்சாட்டு

Report Print Ajith Ajith in அரசியல்

இராணுவத்தினர் உள்ளிட்டோரை தண்டிக்கும் செயற்பாடு தற்போது முன்னெடுக்கப்படுவதாக பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச குற்றம் சுமத்தியுள்ளார்.

நிரந்தர நீதாய மேல்மன்றில் நேற்று முன்னிலையானதன் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தற்போதைய அரசாங்கம் தமது அரசியல் எதிர்த்தரப்பினரை பழி வாங்குவதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

டி.ஏ ராஜபக்ச ஞாபகார்த்த அருங்காட்சியக நிர்மாண பணிகளின் போது 33 மில்லியன் ரூபா அரசாங்க பணத்தை முறையற்ற வகையில் பயன்படுத்தியமை உள்ளிட்ட பல குற்றச்சாட்டின் கீழ் கோத்தபாய ராஜபக்ச உள்ளிட்ட 7 பேருக்கு எதிராக சட்டமா அதிபரினால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இதன்போது முன்னிலையான கோத்தபாய உள்ளிட்ட 7 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

ஒருவருக்கு தலா ஒரு லட்சம் ரூபா வீதம் ரொக்க பிணையிலும் 10 லட்சம் ருபா வீதம் சரீர பிணையிலும் செல்ல 7 பேருக்கும் நீதியரசர்கள் குழாம் உத்தரவிட்டது.

இதேநேரம், அவர்கள் 7 பேரினதும் வெளிநாட்டு பயணங்களுக்கும் நீதாய மேல் நீதிமன்றம் தடை விதித்தும் உத்தரவிட்டுள்ளது.