சரத் பொன்சேகாவின் கருத்தால் இராணுவ அதிகாரிகள் குழப்பத்தில்

Report Print Steephen Steephen in அரசியல்
647Shares

அரசியல் இலாபம் பெறுவதற்காக சிலர் நாட்டின் தேசிய பாதுகாப்பு தொடர்பாக வெளியிடும் உண்மைக்கு புறம்பான கருத்துக்களை வன்மையாக கண்டிப்பதாக பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.

இந்த நபர்கள் கடந்த காலம் முழுவதும் தேசிய பாதுகாப்பு தொடர்பான உண்மைக்கு புறம்பான விடயங்களை சமூகமயப்படுத்த முயற்சித்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பாதுகாப்புக்கு முக்கியமான படை முகாம்கள் அனைத்தும் வலுப்படுத்தப்பட்டுள்ளன. பாதுகாப்பு தொடர்பான மீளாய்வுகளின் பின்னரே காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன.

படையினரின் பலத்தை மேலும் அதிகரிக்க நீர்காகம் போன்ற இராணுவப் பயிற்சிகள் தொடர்ந்தும் நடைபெற்று வருவதோடு, வெளிநாட்டு பயிற்சிகளுக்கும் படையினர் அனுப்பப்பட்டு வருகின்றனர் எனவும் ராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் பாதுகாப்பு நிலைமை பூஜ்ஜியமாக மாறியுள்ளதாகவும், இராணுவத்தின் பலம் குறைந்து இருப்பதாகவும் முன்னாள் இராணுவத் தளபதியான அமைச்சர் சரத் பொன்சேகா கூறியிருந்தார். இதற்கு பதிலளிக்கும் வகையிலேயே பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் இதனை கூறியுள்ளார்.

இதேவேளை, அமைச்சர் சரத் பொன்சேகா இராணுவம் மற்றும் இராணுவ தளபதியை விமர்சித்து அண்மையில் வெளியிட்ட கருத்துக்கள் இராணுவ உயர் அதிகாரிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.