மஹிந்தவாக மாறிய மைத்திரி

Report Print Steephen Steephen in அரசியல்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவை தோற்கடித்து ஆட்சிக்கு வந்த நபர், மற்றுமொரு மகிந்த ராஜபக்ஸவாக மாறியுள்ளார் என நீதியான சமூகத்திற்கான மக்கள் அமைப்பின் இணை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் சரத் விஜேசூரிய தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட பொதுவேட்பாளர், மாதுளுவாவே சோபித தேரருடன் செய்து கொண்ட உடன்படிக்கை வஞ்சிக்கப்பட்ட உடன்படிக்கையாக மாறி விட்டது எனவும் அவர் கூறியுள்ளார்.

ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதை குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவிக்கையில்,

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பேச வேண்டியது சிறந்த பிரதமர் ஒருவரை பற்றி அல்ல, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி பதவியை ஒழிக்க வேண்டியது பற்றியே பேச வேண்டும்.

ஜனாதிபதி மேடைகளின் தனது நோக்கங்கள் பற்றி பெருமை பேசினாலும் நாட்டை ஆட்சி செய்வது தொடர்பான நோக்கு கிடையாது என்பதை செயலில் காட்டியுள்ளார்.

அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் மீண்டும் தேர்ந்தெடுக்க மைத்திரிபால சிறிசேனவுக்கு தகுதியில்லை. அதேபோல் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் தகுதியற்றவர்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்னை ஆட்சிக்கு கொண்டு வர உதவியவர்களை என்.ஜீ.ஓகாரர்கள் என முத்திரை குத்தியுள்ளார்.

இதன் மூலம் கட்சி சார்பற்ற பொது வேட்பாளரை ஆட்சிக்கு கொண்டு வந்து, சட்டத்தை மதிக்கும் பிரஜைகள், வாழ்க்கையில் மறக்க முடியாத பாடத்தை கற்றுக்கொண்டனர் எனவும் பேராசிரியர் சரத் விஜேசூரிய குறிப்பிட்டுள்ளார்.