பொன்சேகாவுக்கு எதிராக இராணுவ அதிகாரிகள் போர்க்கொடி

Report Print Rakesh in அரசியல்

இலங்கையின் தற்போதைய இராணுவத் தளபதியான மகேஷ் சேனாநாயக்க தொடர்பில் முன்னாள் இராணுவத் தளபதியான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா வெளியிட்டுள்ள கருத்துக்கு உயர்மட்ட இராணுவ அதிகாரிகள் கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளனர்.

பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் இது தொடர்பில் முறைப்பாடொன்றையும் பதிவு செய்ய அவர்கள் உத்தேசித்துள்ளனர் என நம்பகரமான வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது.

கம்பஹாவில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட அமைச்சர் சரத் பொன்சேகா,

இராணுவத் தளபதி இராணுவப் படையணியைக் குறைக்க நடவடிக்கை எடுத்து வருகின்றார். அது மிகவும் பாரதூரமான விடயமாகும்.

இராணுவப் பாதுகாப்பு பீடத்தில் முறையாக கல்வி பயிலாது, இராணுவத் தளபதியாகப் பதவியைப் பொறுப்பேற்றவுடன் மனம் போன போக்கில் அவர் செயற்பட்டு வருகின்றார்.

யுத்த காலத்தில் சேவையில் இருந்த 40 வருட அனுபவம் கொண்டவர் என்ற வகையில், யுத்தமற்ற சூழ்நிலையில் நாட்டின் தேவையைப் புரிந்துகொள்வது எனக்கு கடினமான விடயமல்ல.

ஆனால், தற்போதைய இராணுவத் தளபதியோ 'இடி அமீன்' போன்று செயற்பட்டு வருகின்றார். இவரைப் போன்றதொருவரை நான் இதுவரை கண்டிருக்கவில்லை எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்த அறிவிப்பு தொடர்பில் இராணுவத்திலுள்ள உயர்மட்ட அதிகாரிகள் கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளனர். பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரிடமும் இது சம்பந்தமாக அவர்கள் பேசியுள்ளனர்.

இந்நிலையிலேயே ஜனாதிபதியிடமும் அவர்கள் முறையிடவுள்ளனர். இராணுவக் கட்டமைப்புக்குள் அரசியலைப் புகுத்துவது பாதக விளைவுகளையே ஏற்படுத்தும்.

அதுமட்டுமல்ல, இராணுவத்தின் நன்மதிப்புக்குக் களங்கம் ஏற்படுத்தும் வகையிலேயே முன்னாள் இராணுவத் தளபதியின் கருத்துக்கள் இருக்கின்றன என்று அரசியல் விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.