பிரித்தானியா உள்ளிட்ட நாடுகள் இலங்கையின் நடவடிக்கைகளுக்கு வரவேற்பு

Report Print Ajith Ajith in அரசியல்
109Shares

ஐக்கிய நாடுகளின் திட்டங்களையும், நடவடிக்கைகளையும் நடைமுறைப்படுத்துவதில் இலங்கை தொடர்ந்தும் ஈடுபடுவதை தாம் வரவேற்பதாக ஜேர்மனி, மெசடோனியா, மொன்டெனெக்ரோ மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகள் தெரிவித்துள்ளன.

இலங்கை அரசாங்கம் தேசிய நல்லிணக்க நடவடிக்கைகளையும் சமாதானத்தை கட்டியெழுப்பும் முன்னெடுப்புக்களையும் மேற்கொண்டு வருகிறது.

பொதுமக்களின் காணிகளை படைத்தரப்பு மீளக்கையளிக்கும் நடவடிக்கை தொடர்கிறது. இந்தநிலையில் காணாமல் போனோர் தொடர்பான அலுலகத்தின் பணிகளுக்கு அனைவரும் தமது ஒத்துழைப்புக்களை வழங்கவேண்டும்.

அத்துடன் நட்டஈடுகளை வழங்கும் அலுவலகம் ஒன்றை இலங்கை அரசாங்கம் அமைக்கவேண்டும் என்று குறித்த நாடுகள் கோரியுள்ளன.

அதேநேரம் முக்கிய விடயமான சமாதான முன்னெடுப்புகள் இன்னும் தாமதமாகவே இடம்பெறுகின்றன. நல்லிணக்க முயற்சிகளில் தொடர்ந்தும் தடங்கல் நிலை ஏற்பட்டுள்ளது.

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கி சர்வதேச நியமம் கொண்ட ஒரு சட்டத்தை அமுல்செய்யவேண்டும் என்ற கோரிக்கை இன்னும் நிறைவேற்றப்படவில்லை.

அரசியலமைப்பு மீளமைப்பு 2016ஆம் ஆண்டில் இருந்து முன்னெடுக்கப்படுகிறது. எனினும் இன்னும் முன்னேற்றப்பாதைகள் ஏற்படவில்லை.

அத்துடன் அண்மைக்காலங்களில் மனித உரிமைகள் காப்பாளர்கள் மீதான தாக்குதல்கள் கரிசனையை ஏற்படுத்தியுள்ளன.

இந்த நிலையில் இலங்கையின் தலைமைத்துவங்கள், நடவடிக்கைகளுக்கான தெளிவான கொள்கைகளை வகுக்கவேண்டும்.

இதன்மூலமே ஐக்கிய நாடுகளின் பரிந்துரைகளை இலங்கை அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தமுடியும். அத்துடன் இலங்கை மக்கள், நல்லிணக்கத்துடனும் சுபீட்சத்துடன் வாழமுடியும்

எனவே இலங்கை அரசாங்கம், ஐக்கிய நாடுகளின் 30-1,34-1 பரிந்துரைகளை எதிர்வரும் மார்ச் மாதத்துக்குள் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று ஜேர்மனி, மெசடோனியா, மொன்டெனெக்ரோ மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் வலியுறுத்தியுள்ளன.