கூட்டரசிலிருந்து உடன் வெளியேற வேண்டும்! மைத்திரிக்கு கடும் அழுத்தம்?

Report Print Rakesh in அரசியல்

மாகாண சபைகளுக்கான தேர்தல் அறிவிப்பு வெளியாவதற்கு முன்னர் கூட்டரசிலிருந்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி முழுமையாக வெளியேறவேண்டுமென கட்சித் தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் 15 பேர் கொண்ட குழு உறுப்பினர்கள் கோரிக்கை விடுக்கவுள்ளனர் என அறியமுடிகின்றது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் 15 பேர் கொண்ட குழு உறுப்பினர்களுக்கும் இடையிலான முக்கியத்துவம் மிக்க சந்திப்பொன்று அடுத்த வாரம் நடைபெறவுள்ளது.

இதன்போதே மேற்படி கோரிக்கையை விடுப்பதற்கு 15 பேர் கொண்ட அணி தீர்மானித்துள்ளது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு எதிராக வாக்களித்த சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் 16 பேர் கூட்டரசிலிருந்து வெளியேறினர்.

அதன்பின்னர் மகிந்த அணியுடன் இணைந்து அரசியல் பயணத்தை ஆரம்பித்துள்ளனர். எனினும், அந்த அணியில் இடம்பிடித்திருந்த தயாசிறி ஜயசேகர மீண்டும் மைத்திரியுடன் சங்கமித்துள்ளார்.

தாம் வெளியேறிய கையோடு சு.கவின் ஏனைய உறுப்பினர்களும் கூட்டரசிலிருந்து வெளியேறுவார்கள் என்றே டிலான் தரப்பு எதிர்பார்த்தது. ஆனால், அவ்வாறு நடக்கவில்லை.

இந்நிலையிலேயே, ஜனாதிபதியை நேரில் சந்தித்து மேற்படி கோரிக்கையை 15 பேர் கொண்ட குழுவினர் விடுக்கவுள்ளனர்.

அதுமட்டுமல்ல, கூட்டரசிலிருந்து வெளியேறாவிட்டால் மாகாண சபைத் தேர்தலில் பெரும் பின்னடைவைச் சந்திக்க வேண்டிவரும் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டவுள்ளனர்.