தொல்லியல் திணைக்களத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம்

Report Print Suthanthiran Suthanthiran in அரசியல்

வடமாகாணத்தில் தொல்லியல் திணைக்களத்தின் அத்துமீறல்கள் அண்மைக்காலமாக அதிகரித்துள்ள நிலையில் அதனை சகித்துக் கொண்டிருக்க முடியாதுள்ளதுடன், இனியும் தொடர்ந்தால் தொல்லியல் திணைக்களத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என வடமாகாணசபை அவை தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.

மாகாணசபையின் 131வது அமர்வில் மாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் முல்லைத்தீவு மாவட்டத்தில் தொல்லியல் திணைக்களத்தின் அத்துமீறல்களை சுட்டிக்காட்டியுள்ளார்.

தொல்லியல் திணைக்களம் பௌத்த விகாரைகளையும், புத்தர் சிலைகளையும் தமிழர் பிரதேசங்களில் நிறுவ நினைக்கிறதே தவிர தனது வேலையை செய்யவே இல்லை என கூறப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,

தொல்லியல் திணைக்களத்தின் அண்மைக்கால செயற்பாடுகள் எல்லைமீறி சென்று கொண்டிருக்கின்றன. தொல்லியல் திணைக்களத்தின் தலைமை அதிகாரியாக இருந்து கொண்டிருப்பவர் ஒரு பௌத்த பிக்கு என நான் அறிந்திருக்கிறேன்.

தலைமை பொறுப்பில் சிவில் அதிகாரி ஒருவர் இருக்கவேண்டிய நிலையில் பௌத்த பிக்கு ஒருவர் இருப்பாரேயானால் அங்கு பக்கச்சார்பு இருப்பதற்கு நிறைய வாய்ப்புக்கள் இருந்து கொண்டிருக்கின்றது.

இதேபோன்று வனஜீவராசிகள் திணைக்களத்தின் செயற்பாடுகளும் எல்லை மீறி சென்று கொண்டிரு ப்பதை அவதானித்துக் கொண்டிருக்கின்றோம்.

இதனடிப்படையில் உறுப்பினர் து.ரவிகரன் கூறிய கருத்துக்களை அடிப்படையாக வைத்துக் கொண்டு ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரின் கவனத்திற்கு இந்த விடயத்தை கொண்டு செல்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

அவர்களும் இந்த விடயத்தில் தீர்க்கமான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்கவேண்டும். தொடர்ச்சியாக நாங்களும் இவ்வாறான அடாவடிகளை பார்த்துக் கொண்டிருக்கவோ, சகித்துக் கொள்ளவோ இயலாது.

இந்த நிலை தொடருமாக இருந்தால் தொல்லியல் திணைக்களத்தினை முற்றுகையிட்டு வடமாகாணசபை உறுப்பினர்கள் தொடர் போராட்டங்களை நடத்தவேண்டிய நிர்ப்பந்தம் உருவாகும்.

இவ்வாறான எச்சரிக்கைகளை மாகாணசபையில் முன் எப்போதும் நான் கூறியதில்லை. ஆனால் இப்போது கூறவேண்டிய தேவை எழுந்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.