இராணுவத்தில் தவறில்லையென ஐ.நாவில் கூறப்போகும் மைத்திரி! அரசு அறிவிப்பு

Report Print Rakesh in அரசியல்

இலங்கை முப்படையினர் பொதுமக்களுக்கு எதிரான தாக்குதல்களில் ஈடுபடவில்லை என்பதில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதியாக இருக்கிறார் என்று அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகள் சபையின் 39ஆவது கூட்டத்தொடரில் ஜனாதிபதி இந்த நிலைப்பாட்டைச் சர்வதேசத்துக்குத் தெரியப்படுத்துவார் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

“எதிர்வரும் 25ஆம் திகதி நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அமர்வில் கலந்துகொள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு வாய்ப்புக் கிடைத்துள்ளது.

முதல் அமர்வுதான் முக்கியமானது என்பதால், இதனை முக்கியமான ஒன்றாகவே கருதுகின்றோம். இதில் அவர் சிங்கள மொழியில் உரையாற்றவுள்ளார்.

எமது நாட்டுக்கான சவால்கள் தொடர்பில் சர்வதேசத்தை தெளிவுபடுத்துவதே அவரது முக்கியமான நோக்கமாகும். நல்லிணக்கம் தொடர்பான முன்னேற்றம் தொடர்பிலும் அவர் உரையாற்றுவார்.

அத்தோடு, ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளரைச் சந்தித்து அரசின் நிலைப்பாடு குறித்தும் தெளிவுபடுத்தவுள்ளார்.

இதன்போது, சர்வதேசத் தலைவர்களைச் சந்தித்தும் விசேட கலந்துரையாடல்களில் ஜனாதிபதி மைத்திரிபால ஈடுபடவுள்ளார்.

மேலும், நெல்சன் மண்டேலா தொடர்பான உச்சி மாநாட்டிலும் ஜனாதிபதி கலந்துகொண்டு உரையாற்றவுள்ளார்.

உலகளாவிய ரீதியாகச் சவாலாகக் காணப்படும் போதைப்பொருளை ஒழிப்பது தொடர்பான வேலைத்திட்டமொன்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தலைமையில் அங்கு நடைபெறவுள்ளது.

இதிலும் ஜனாதிபதி கலந்துகொள்ளவுள்ளார். இதற்காக எமது தரப்பிலிருந்து ஒத்துழைப்புக்களையும் ஆதரவையும் எப்போதும் ஜனாதிபதிக்கு வழங்கத் தயாராகவே இருக்கின்றோம்" - என்றார்.