தலவாக்கலையில் நடைபெறவுள்ள போராட்டத்திற்கு கூட்டமைப்பும் ஆதரவு

Report Print Rakesh in அரசியல்

பெருந்தோட்டத்துறை தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பள உயர்வை வழங்குமாறு கம்பனிகளை வலியுறுத்தி எதிர்வரும் 23ஆம் திகதி தலவாக்கலையில் நடைபெறவுள்ள போராட்டத்திற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஆதரவு தெரிவித்துள்ளது.

கடந்த முறைபோல் தோட்டத்தொழிலாளர்கள் ஏமாற்றப்படாமல், வாழ்க்கை சுமையை சமாளித்து கௌரவமான முறையில் வாழ்வதற்கு வழி சமைக்கக்கூடிய வகையிலான சம்பள உயர்வு இம்முறை வழங்கப்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

அதேபோல் அபிவிருத்தி மட்டுமல்லாது, மலையக மக்களுக்கு அரசியல் ரீதியிலான உரிமைகள் வழங்கப்பட வேண்டும் எனவும் இந்த விடயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுதியாகவே நிற்கின்றது என்றும் அவர் கூறியுள்ளார்.

2016ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் கைச்சாத்திடப்பட்ட கூட்டு ஒப்பந்தமானது அடுத்த மாதத்துடன் காலாவதியாகின்றது. அதை புதுப்பிப்பதற்குரிய பேச்சுகள் இம்முறை முன்கூட்டியே ஆரம்பமாகினாலும் முதல் சுற்றுப் பேச்சுடனேயே அது ஸ்தம்பித நிலையை அடைந்துள்ளது.

இந்த நிலையிலேயே தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பள உயர்வை கோரியும், கம்பனிகளுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையிலும் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் பங்காளியான தொழிலாளர் தேசிய சங்கத்தால் மேற்படி போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.