நாடு திரும்பிய கையோடு அவசர கூட்டம் நடத்தவுள்ள ரணில்! ரவிக்கு காத்திருக்கும் அதிஷ்டம்?

Report Print Rakesh in அரசியல்

பொருளாதார மாநாட்டில் பங்கேற்பதற்காக வியட்நாம் சென்றுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க, நாடு திரும்பிய கையோடு கட்சியின் மூத்த உறுப்பினர்களுடன் முக்கியத்துவம் மிக்க சந்திப்பொன்றை நடத்தவுள்ளார் என சிறிகொத்தா வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது.

மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பில் விசாரணை நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையில், மோசடி இடம்பெற்றதாக கூறப்படும் காலப்பகுதியில் நிதி அமைச்சராக இருந்த ரவி கருணாநாயக்க மீது விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டிருந்தன.

இதையடுத்து இவ்விவகாரத்துடன் ரவி கருணாநாயக்க எவ்விதத்தில் தொடர்புபட்டுள்ளார் என்பது தொடர்பில் தனக்கு அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க சட்டமா அதிபருக்கு பணிப்புரை விடுத்திருந்தார்.

இந்த அறிக்கையானது இன்று மதியம் பிரதமர் செயலகத்திடம் சட்டமா அதிபரால் கையளிக்கப்படவுள்ளது. இந்த அறிக்கையானது ரவி கருணாநாயக்கவுக்கு சாதகமான முறையிலேயே அமையும் எனக் கூறப்படுகின்றது.

இதை அடிப்படையாக கொண்டே ரவி கருணாநாயக்கவுக்கு அமைச்சுப் பதவி வழங்குமாறு ஜனாதிபதியிடம், பிரதமர் ரணில் பரிந்துரை செய்யவுள்ளார் என்றும், ஐக்கிய தேசியக் கட்சியின் பின்வரிசை எம்.பிக்களின் ஆசியுடனேயே இந்த பரிந்துரை முன்வைக்கப்பட்டுள்ளது என்றும் அறிய முடிகின்றது.

இந்த நிலையிலேயே வியட்நாமிலிருந்து நாடு திரும்பிய கையோடு அறிக்கை சம்பந்தமாகவும், அடுத்தகட்ட நகர்வுகள் குறித்தும் மூத்த உறுப்பினர்களுடன் ரணில் ஆலோசனை நடத்தவுள்ளார்.