விலை சூத்திரம் மாயக்காரர்களின் சூத்திரம்: கூட்டு எதிர்க்கட்சி

Report Print Steephen Steephen in அரசியல்

விலை சூத்திரம் சம்பந்தமாக தகவல் அறியும் சட்டத்தின் கீழ், தகவல்களை வழங்குமாறு கேட்டபோது அது சம்பந்தமான தகவல்களை வழங்க முடியாது என உத்தியோகபூர்வமாக அறிவித்ததாக கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். மேலும் தெரிவிக்கையில்,

விலை சூத்திரம் பற்றி அமைச்சர்களுக்கு தெரியாது. சர்வதேச நாணய நிதியத்தின் தேவைக்கு அமைய இது நடக்கின்றது என்று முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்திருந்தார்.

எரிபொருட்களின் விலையேற்றம் தொடர்பான விலை சூத்திரம் என்ன என்பது சிக்கலானது. இது மாயக்காரர்களின் சூத்திரமா என்ற கேள்வி எழுகிறது.

கடந்த 2014ஆம் ஆண்டு கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 140 டொலர்கள். தற்போதைய அரசாங்கத்தின் கீழ் கச்சாய் எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 140 டொலர்களாக உயர்ந்ததால், ஒரு லீட்டர் பெட்ரோல் 295 ரூபாயாக விலை உயரும்.

மாதந்தோறும் எரிபொருள் விலைகள் அதிகரிக்குமாயின் அதற்கு ஈடாக அரச மற்றும் தனியார் ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்கும் சூத்திரம் ஒன்றை உருவாக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை குருணாகல் மேல் நீதிமன்றத்தில், முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு எதிரான வழக்கு விசாரணைகள் தொடர்பான செய்திகளை சேகரிக்க ஊடகவியலாளர்கள் நீதிமன்றத்திற்குள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது.

எனினும் இந்த வழக்கின் செய்திகள் அரச பத்திரிகை ஒன்றின் தலைப்புச் செய்தியாக வந்துள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.

அத்துடன், நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் புகையிலை நிறுவனத்திடம் இருந்து கிடைக்கும் வரிப்பணம் 1800 கோடி ரூபாய் குறைந்துள்ளதாக நிதியமைச்சர் கவலை வெளியிட்டுள்ளதாகவும், இது மிகப் பெரிய பாதிப்பு எனவும் டளஸ் அழகப்பெரும மேலும் தெரிவித்துள்ளார்.