இந்தோனேசிய ஜனாதிபதியுடன் பிரதமர் இருத்தரப்பு பேச்சுவார்த்தை

Report Print Steephen Steephen in அரசியல்

இலங்கை மற்றும் இந்தோனோசியா இடையில் நட்புறவுகளை மேலும் வலுப்படுத்தி, இந்து சமுத்திரத்தில் சுதந்திரமான கப்பல் பயணம் மற்றும் அமைதியை பாதுகாக்கும் வேலைத்திட்டத்திற்காக இணைந்து செயற்பட வேண்டியதன் அவசியம் குறித்து இந்தோனோசியா ஜனாதிபதி ஜோகோ விதோதோ மற்றும் இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க இடையில் இன்று நடைபெற்ற இருத்தரப்பு பேச்சுவார்த்தையின் போது வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்த பேச்சுவார்த்தை வியட்நாமின் ஹெனோய் நகரில் உள்ள மெலியா ஹொட்டலில் நடைபெற்றது. ஐரோப்பிய வர்த்தக சந்தையின் போதுமான பங்குகளை கைப்பற்றுவதற்காக இரண்டு நாடுகளும் இணைந்து பொதுவான வழிமுறையை ஆரம்பிப்பது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இதனை தவிர இலங்கை மற்றும் இந்தோனேசியா இடையில், வர்த்தகம், முதலீடு மற்றும் வணிக சந்தர்ப்பங்களை விரிவுப்படுத்தும் நோக்கில் இரண்டு நாடுகளின் உறுப்பினர்களை கொண்டு அமைக்கப்பட்டுள்ள கூட்டுக்குழுவின் மூலம் காலவரையறையுடன் கூடிய வேலைத்திட்டத்தை உருவாக்கி, அதன் ஊடாக எதிர்காலத்தில் இரு நாடுகளுக்கும் இடையில் வர்த்தக உடன்படிக்கையை ஏற்படுத்துவதற்கான அடிப்படையை உருவாக்கவும் இணக்கம் காணப்பட்டுள்ளது.

சுற்றுலாத்துறையின் அபிவிருத்திக்காக கூட்டாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள், இரண்டு நாடுகளின் இராணுவத்தினர் இடையில் பாதுகாப்பு வேலைத்திட்டங்களை ஏற்பாடு செய்தன் தொடர்பாகவும் இதன் போது கருத்துக்கள் பரிமாறிக்கொள்ளப்பட்டுள்ளன.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வாழ்த்துச் செய்தியையும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, இந்தோனேசிய ஜனாதிபதியிடம் கையளித்துள்ளார்.

இந்த பேச்சுவார்த்தையின் அபிவிருத்தி வழிமுறைகள், சர்வதேச வர்த்தகத்துறை அமைச்சர் மலிக் சமரவிக்ரம, பிரதமரின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, மேலதிக செயலாளர் சமன் அத்தாவுஹெட்டி, விசேட உதவியாளர் சென்ட்ரா பெரேரா, வியட்நாமுக்கான இலங்கையின் தூதுவர் ஹசிந்தி திஸாநாயக்க ஆகியோரும் கலந்துக்கொண்டனர்.