த.தே.கூட்டமைப்பின் எம்.பிமார் தங்களின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும்: சுரேஸ் பிரேமச்சந்திரன்

Report Print Suthanthiran Suthanthiran in அரசியல்

ஐ.நா மனித உரிமைகள் ஆணையகத்தின் தீர்மானத்தை இலங்கை அரசாங்கம் நடைமுறைப்படுத்தும் என தமிழ் தேசிய கூட்டமைப்பு உத்தரவாதம் வழங்கியிருக்கும் நிலையில் அரசாங்கத்தின் செயற்பாடுகள் மாறுபட்டதாக இருக்கின்றது.

இந்நிலையில் தாம் வழங்கிய உத்தரவாதம் குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பில் உள்ள சகல நாடாளுமன்ற உறுப்பினர்களும் தமிழ் மக்களுக்கு தங்களுடைய நிலைப்பாடுகளை தெளிவுபடுத்த வேண்டியது கட்டாயம்.

மேற்கண்டவாறு ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சியின் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் கூறியுள்ளார்.

சமகால அரசியல் நிலைமைகள் குறித்து இன்று அவருடைய அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இராணுவத்தின் மீது சுமத்தப்பட்டிருக்கின்ற யுத்தக் குற்றங்கள் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக இராணுவத்தைப் பாதுகாப்பதற்காக புதிய யோசனையொன்றை ஐ.நா செயாளர் நாயகத்திற்கு ஐனாதிபதி கொடுக்க இருப்பதாக பல தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றது.

ஐ.நா மனித உரிமைகள் ஆணையகத்தில் 2015 ஆம் ஆண்டு யுத்தக் குற்றங்கள் தொடர்பாக சர்வதேச நீதிபதிகள் மற்றும் உள்நாட்டு நீதிபதிகளை உள்ளடக்கியதாக நீதி விசாரணையொன்று நடாத்தப்படவேண்டும் கூறப்பட்டது.

அப்போது கூட்டமைப்பின் முக்கியஸ்தரும் பேச்சாளருமான சுமந்திரன் அவர்கள் அதனை ஆதரித்து அந்த விசயங்கள் நடைபெறுமென்றும் அதற்குத் தாங்கள் உத்தரவாதப்படுத்துகின்றோம் என்ற அடிப்படையில் அந்த 2015ம் ஆண்டு அவ்வாறானதொரு தீர்மானமும் கொண்டு வரப்பட்டதுடன் அதனை நடைமுறைப்படுத்த தாம் உறுதிப்படுத்துவதாக கூறி கால அவகாசத்தையும் பெற்றுக் கொடுத்தனர்.

ஆனால் அது சம்மந்தமாக விசாரணைக் குழுக்கள் எதுவும் ஏற்படுத்தபடவும் இல்லை. அது தொடர்பான எந்த நடவடிக்கைகளும் அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படவும் இல்லை.

இதற்கு மாறாக ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர்கள் எனப் பல தரப்பினரும் இராணுவத்தை விசாரிக்க முடியாது. இராணுவத்தினர் பாதுகாக்கப்பட வேண்டும். அதற்கான முழு நடவடிக்கைகளையும் மேற்கொள்கொள்வோம் என்று தொடர்ச்சியாகச் சொல்லி வந்தார்கள்.

2015ஆம் ஆண்டு ஜக்கிய நாடுகள் மனிதவுரிமை பேரவையில் இலங்கையில் இடம்பெற்ற யுத்த குற்றங்கள் தொடர்பாக நீதி விசாரணை சர்வேதச உள்நாட்டு நீதிபதிகளது பங்குபற்றலுடன் இடம்பெற வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அப்போது அதற்கு சுமந்திரன் அதனை அரசு நடமுறைப்படுத்துவதை தாம் உறுதிப்படுத்துவதாக கூறி அதற்கு அரசுக்கு கால அவகாசத்தை பெற்றுக்கொடுத்திருந்தனர்.

அந்த நிலையில் 2017ஆம் ஆண்டும் மீண்டும் இரண்டாண்டுகளில் அதனை அரசாங்கம் நிறைவேற்றும் என கூறி கூட்டமைப்பில் சிவசக்தி ஆனந்தன் தவிர்ந்த ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் சம்மதம் தெரிவித்து கடிதம் அனுப்பி மேலும் இரண்டாண்டு கால அவகாசத்தை பெற்றுக்கொடுத்தனர்.

குறிப்பாக தாம் கால அவகாசம் வழங்குவது இலங்கை அரசாங்கத்தை தொடர்ந்தும் சர்வதேசத்தின் கண்காணிப்பில் வைத்திருக்கவே என கூட்டமைப்பினர் கூறியிருந்தனர்.

ஆனால் தற்போது அந்த இரண்டாண்டும் முடிவடைவதற்கு ஆறு மாதங்களே உள்ள நிலையில் இராணுவத்தை விசாரிக்க அனுமதிக்க முடியாது என்றே தற்போதும் ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்டவர்கள் கூறி வருகின்றார்கள்.

அத்துடன் இராணுவத்தை காப்பாற்ற புதிய யோசனை ஒன்றை முன்வைக்கப் போவதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் கால அவகாசத்தை கூட்டமைப்பு பெற்றுக்கொடுத்த நிலையில் ஜனாதிபதியின் திட்டம் வேறு மாதிரியாக உள்ளது.

எனவே இது தொடர்பாக கூட்டமைப்பின் ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினரும் மக்களுக்கு இது தொடர்பாக தெளிவுபடுத்த வேண்டும். இவ்வாறான நிலையில் இராணுவத்தைப் பாதுகாக்க ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட அரச தரப்பினர்கள் முனைவதென்பது அடிப்படையில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு ஒரு நீதியை நியாயத்தைப் பெற்றுக் கொடுக்க இவர்கள் தயாராக இல்லை என்பது தான் உண்மையான பொருள்.

ஆகவே தமிழ் மக்களுக்கான நீதி கிடைக்கப்பெற மாட்டாதென்பதும் தெளிவாகத் தெரிகின்றது. அதே நேரம் வெறுமனே சுமந்திரன் பல்வேறு உறுதி மொழிகளை தமிழ் மக்களுக்கு வழங்கி வருகின்றார்.

ஆனால் அவை அனைத்தும் மக்களை ஏமாற்றுபவையாகவே இருக்கின்றன. ஆனால் தற்போது குற்றமிழைத்த படையினரை அரசாங்கம் காப்பாற்ற முயற்சிப்பதாகவும் இது குறித்து ஐ.நா சபைக்கு எடுத்துரைக்கவுள்ளதாகவும் கூறுகின்றார்.

ஆனால் இதே சுமந்திரனே இந்த அரசாங்கத்தை கொண்டு அத்தீர்மானத்தை நடமுறைப்படுத்தலாம் என பல உறுதிமொழிகளை வழங்கினார். இவ்வாறு பார்க்கின்ற போது வெறுமனே சுமந்திரன் என்ற தனி நபரிடம் தமிழ் மக்களின் ஒட்டுமொத்த பிரச்சினையும் ஒப்படைத்து விட்டோமா?

இதில் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும், கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் எதுவித தொடர்புமில்லையா ? போன்ற கேள்விகளுக்கு கூட்டமைப்பு பதிலளிக்க வேண்டும்.

டெல்லி சென்றிருக்கும் சம்மந்தன் அரசியல் சாசன மாற்றத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என கூறியிருக்கிறார். இங்கே எவ்வாறான மாற்றம் என்பதை கூற வேண்டும். அது தமிழ் மக்களின் ஒட்டுமொத்த பிரச்சினையும் தீர்ப்பதற்கான அரசியல் சாசனமாக அமையுமா? அதில் சமஸ்டி உள்ளடக்கப்படுமா?

தமிழர்களுக்கான சுயாட்சி கிடைக்குமா? தமிழர்கள் தம்மை தாமே சமூக, பொருளாதார ரீதியாக ஆழக்கூடிய விடயம் உள்ளடக்கப்பட்டிருக்கின்றதா என்பன போன்றன தொடர்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பானது மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் என்றார்.