கூட்டமைப்பின் தலைமைகள் உடனடியாக செயற்பட வேண்டும்! வடக்கு அவை தலைவர் கோரிக்கை

Report Print Suthanthiran Suthanthiran in அரசியல்

தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலமை, தமிழ்தேசிய கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சிகளின் தலமைகள் யதார்த்தத்தை சரியாக உணர்ந்து கொண்டு செயற்பட்டிருந்தால் வடமாகாணசபை யில் இன்று இத்தனை குழப்பங்கள் உருவாகியிருக்க வாய்ப்பே இல்லை.

மேற்கண்டவாறு வடமாகாணசபை அவை தலைவரும், தமிழரசு கட்சியின் முக்கியஸ்த்தருமான சீ.வி.கே.சிவஞானம் கூறியுள்ளார்.

வடமாகாண சபையின் அண்மைக்கால நிலமைகள் குறித்து இன்று ஊடகங்களுக்கு கருத்து கூறும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் அவர் கூறுகையில்,

மாகாண அமைச்சர்சபை இழுபறிகள் குறித்து தீர்வினை காண்பதற்காக முன்னர் ஒருதடவை முயற்சிகளை மேற்கொண்டிருந்தேன். ஆயினும் அது சாத்தியப்படவில்லை.

இந்நிலையில் நேற்று நடைபெற்ற வடமாகாணசபையின் 131வது அமர்வில் சில யோசனைகளை முன்வைத்துள்ளேன். அதில் குறிப்பாக முதலமைச்சர் தனது அமைச்சர் சபையை கலைத்து விட்டு புதிய அமைச்சர் சபையை உடனடியாக தேர்வு செய்யலாம்.

அது யாருக்கும் வெற்றியும் இல்லை, யாருக்கும் தோல்வியும் இல்லை. என்ற நிலைப்பாட்டின் படியான தீர்வாக அமையும் எனவும் கூறியுள்ளேன். என்னுடைய இந்த இரு முயற்சிகளுக்கும் இடையில் பல படிப்பினைகள் ஏற்பட்டுள்ளன.

ஆகவே முதல் எடுத்திருந்த முயற்சி தோல்வியடைந்துவிட்டது என்பதற்காக அடுத்தகட்ட முயற்சியை கைவிடுவதை நான் விரும்பவில்லை. இந்நிலையில் இன்று முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனை நேரடியாகச் சந்தித்து கலந்துரையாட தீர்மானித்துள்ளேன்.

முதலமைச்சருக்கும் எனக்கும் இடையில் அதிகளவான கருத்து வேறுபாடுகள் உள்ளன என்பதை வெளிப்படையாக கூறும் ஒருவன் வடமாகாணசபையில் நான் மட்டுமே. ஆனாலும் தனிப்பட்ட முறையில் முதலமைச்சருக்கும் எனக்குமிடையில் நல்ல நட்பு இருக்கிறது.

முதலமைச்சர் மீது எனக்கு மிகுந்த மரியாதை இருக்கின்றது. மேலும் இன்று வடமாகாணசபை இருக்கும் நிலையில் தமிழர்களுக்கு நிர்வாகம் செய்ய தெரியாது. தங்களை தாங்களே ஆளும் வல்லமை கிடையாது என பல்வேறு அவப் பெயர்கள் வருவதற்கு வாய்ப்புக்கள் உள்ளன.

ஒரு காலத்தில் எங்களை நாங்களே சிறப்பாக ஆள தெரிந்தவர்கள், எம்மிடம் சிறந்த நிர்வாக திறன் இருந்தது என்பதை காட்டியவர்கள் நாங்கள். அதில் எனக்கும் பெரியளவு பங்கு உண்டு.

அவ்வாறான பெயர்களை பெற்ற எம்மை ஒன்றும் செய்ய தெரியாதவர்களாக காண்பிக்க நாம் விரும்பமாட்டோம். அமைச்சர்கள் குறித்த சர்ச்சை இன்று நேற்றல்ல ஆரம்பம் முதலே இருந்து வருகின்றது.

குறிப்பாக வடமாகாணத்தில் உள்ள 5 மாவட்டங்களுக்கும் அமைச்சு பதவிகளை கேட்டபோதே இந்த பிரச்சினை உருவாகிவிட்டது. அதன் தொடர்ச்சியே இன்றுள்ள பிரச்சினை.

உண்மையில் 5 மாவட்டங்களுக்கும் 5 அமைச்சர்களை அன்றிருந்த நிலையில் முதலமைச்சராலும், கட்சியாலும் வழங்கியிருக்க முடியாது. காரணம் மாவட்டங்கள் 5 ஆக இருந்தது.

கட்சிகள் 4 ஆக இருந்தது. ஆகவே தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலமையும், தமிழ்தேசிய கூட்டமைப்பில் அங்கத்துவம் பெறும் கட்சிகளின் தலமைகளும் சரியாக அல்லது யதார்த்தத்தை உணர்ந்து செயற்பட்டிருந்தால் இன்று இந்த நிலை வந்திருக்காது.

இன்று கட்சி தலமைகள் தலையிட்டு பிரச்சினையை தீர்க்கும் கட்டத்தை தாண்டி இந்த பிரச்சினை சென்றிருக்கிறது. மேலும் முதலமைச்சரை சிலர் தங்களுடைய சுயநலன்களுக்காக பயன்படுத்துகிறார்கள்.

சிலர் தங்கள் சுயநலன்களுக்காக அவருடன் ஒட்டிக்கொண்டிருக்கிறார்கள். இதனையும் வெளிப்படையாக கூறிய ஒருவன் வடமாகாணசபையில் நான் மட்டுமே. அந்தவகையில் அமைச்சர் சபை விவகாரத்தை 18ம் திகதிக்கு முன்னர் தீர்க்கவேண்டும்.

காரணம் நீதிமன்ற அவமதிப்பு வழங்கு 18ம் திகதிக்கு பின்னர் அது நீதிமன்றத்தின் வழக்காக மாறவுள்ளது.

ஆகவே முதலமைச்சர், நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் இன்னொரு தடவை நீதிமன்றுக்கு செல்லக்கூடாது என்பதற்காக என்னால் இயன்ற அத்தனை முயற்சிகளையும் நிச்சயமாக எடுப்பேன்” என்றார்.

Latest Offers