விடுதலைப் புலிகளுக்கு எதிராக மட்டுமே யுத்தம் நடத்தினோம்! டெல்லி மாநாட்டில் மகிந்த கருத்து

அரசியல்
Topics :

இலங்கையில் போரை வெற்றிகொண்ட இராணுவத்தின் மீது சர்வதேச விமர்சகர்கள் முன்வைக்கும் மனித உரிமைக் குற்றச்சாட்டுகள் போலியானவை என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

Indo-Srilanka Relations : The Way Forward என்ற தலைப்பில் இந்திய தலைநகர் டெல்லியில் இன்று இடம்பெற்ற மாநாட்டில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் பேசிய அவர், “2009ம் ஆண்டு நடைபெற்ற யுத்தமானது விடுதலைப் புலிகளுக்கு எதிரானதே தவிர தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட யுத்தம் கிடையாது.

ஆகையினால் சர்வதேச விமர்சகர்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டுகளானது போலியானவை. எந்த நேரத்திலும், இனம் ஒன்றுக்கு எதிராக நாங்கள் போரிடவில்லை.

அத்துடன், இராணுவ நடவடிக்கைகளும் தமிழ் மக்களுக்கு எதிரானது அல்ல. ஒன்றை மட்டும் மறக்கக் கூடாது. விடுதலைப் புலிகள் இலங்கையில் மட்டுமல்ல இந்தியாவிலும் தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியையும் படுகொலை செய்துள்ளார்கள். எனவே, நாட்டில் பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டமையானது ஒரு சமூகத்திற்கு மட்டும் நன்மையல்ல.

போர் காலத்தில் மூன்று லட்சம் தமிழ் மக்களை இராணுவத்தினர் காப்பாற்றியுள்ளனர். இந்நிலையில், 40 ஆயிரம் தமிழ் மக்கள் கொல்லப்பட்டுள்ளதாக கூறப்படுவது போலியானது.

விடுதலைப் புலிகளையும் சேர்த்து எட்டாயிரத்திற்கும் குறைவானவர்களே கொல்லப்பட்டுள்ளனர்.” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிகழ்வில் பேசிய பா.ஜ.கவின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, “இலங்கையில் அடுத்த ஜனாதிபதியாக மகிந்த ராஜபக்ச வருவார் என்ற நம்பிக்கை இருப்பதாக கூறியுள்ளார்.

மேலும், தற்போது இலங்கையில் ஆட்சியில் இருக்கும் அரசாங்கம் இறைமையை பாதுகாக்க தவறியுள்ளதாவும் குறிப்பிட்டுள்ளார். யுத்தத்திற்கு பின்னர் இலங்கையில் முதலீடுகள் அதிகரித்துள்ளன.

எவ்வாறாயினும், விடுதலைப் புலிகளை அழித்திருக்காவிட்டால் அடுத்த தலைமுறையினருக்கு துரோகம் செய்ததை போலாகியிருக்கும்” என அவர் மேலும் கூறியுள்ளார்.