வடக்கு ஆளுநரின் கருத்துக்களுக்கு சிறீதரன் எம்.பி. கண்டனம்

Report Print Yathu in அரசியல்

இலங்கையின் மத்திய மாகாணத்திற்கு செல்ல முடியாதவாறு சமூக அடிப்படையில் விரட்டியடிக்கப்பட்ட ஆளுநர் றெஜினோல்ட் கூரேக்கு வடக்கு மாகாண அரசியல் தலைவர்கள் பற்றிக் கதைப்பதற்கு அருகதை இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

கரைச்சி பிரதேசசபையின் கந்தபுரம் இலத்திரனியல் நூலகத் திறப்பு விழாவில் இன்றைய தினம் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,

வடக்கு, கிழக்கில் வாழும் தமிழர்கள் தெற்கில் வாழும் சிங்களவர்களை திருமணம் செய்தமை, வெள்ளவத்தை, பம்பலப்பிட்டி போன்ற இடங்களில் இந்துக் கோவில்கள் அமைத்து தமிழர்கள் வழிபடுகின்றமை, வடக்கு, கிழக்கில் வாழும் தமிழர்களுக்கு இராணுவ இரத்தம் ஓடுகிறது, தமிழர்களிடம் இனபேதம், சாதி பேதம், குலபேதம் இருக்கின்றது என்றெல்லாம் வடக்கு ஆளுநர் பொறுப்பற்ற முறையில் கருத்துக்களை தெரிவிப்பதை தவிர்க்க வேண்டும்.

முதலமைச்சரின் பிள்ளைகள், கதிர்காமர், குமார் நடேசன் போன்றவர்கள் சிங்களப் பெண்களைத் திருமணம் செய்துள்ளதால் எல்லோரும் இனம் மாறி திருமணம் செய்து கொள்ளலாம் என்றெல்லாம் கருத்து கூறும் ஆளுநர் விடுதலைப்புலிகளின் அரசியல் பொறுப்பாளர் நடேசனின் மனைவி ஒரு சிங்கள பெண்ணாக இருந்தும் கூட தனது கணவனோடு வெள்ளைக் கொடியுடன் சரணடைந்த போது நிராயுதபாணியான அவரையும் அவரது கும்பத்தையும் இராணுவம் சுட்டு கொன்றதை வெளிப்படையாகச் சொல்வதற்கு ஏன் பயப்பட வேண்டும்?

தமிழர்களின் உடலிலே இராணுவ இரத்தம் ஓடுவதாக அடிக்கடி கனவு காணும் ஆளுநருக்கு ஒருவித மனநோய் உள்ளமைது தெளிவாகத் தெரிகிறது.

உலகத்தில் எங்கும் இல்லாதவாறு வடக்கு, கிழக்கில் மட்டும் திறந்த வெளிச் சிறைச்சாலைகளிலும், பாடசாலைகளிலும்,அரச செயலகங்களிலும், கோயில்களிலும், துயிலும் இல்லங்களிலும் ஒன்றரை இலட்சத்துக்கும் மேற்பட்ட இராணுவத்தினரை குவித்து வைத்து கொண்டு நல்லிணக்கம் என்றும், தேசிய ஒருமைப்பாடு என்றும் வெளிப்பகட்டுக்கு பேசி இரத்தம் ஓடும் கதைகளை கக்கிக்கொள்ளும் ஆளுநர் அளந்து பேச வேண்டுமென தமிழர்கள் எதிர்ப்பார்க்கிறார்கள்.

தமிழ் மக்கள் இராணுவ இரத்தத்திற்கு ஒருபோதும் கையேந்தி நிற்கவில்லை. இந்த மண்ணிலே விடுதலைப் போராட்டம் நடைபெற்ற போது விழுப்புண் அடைந்த பல்லாயிரக்கணக்கான போராளிகளுக்கு சிங்கள இனவாத அரசு உணவும், மருந்தும் அனுப்பாது பட்டினி போட்டு பொருளாதார தடை விதித்த காலங்களில் எல்லாம் மக்கள் தங்கள் இரத்தம் கொடுத்துத்தான் போராளிகளை காப்பாற்றினார்கள்.

ஒரு ஊடகவியலாளரான இசை பிரியாவை இந்த 21ம் நூற்றாண்டில் ஒட்டு மொத்த மனித இனமே வெட்கித் தலைகுனிய கூடிய அளவுக்கு எப்படியெல்லாம் மிருகத்தனமாக இராணுவம் நடத்தியது.

மட்டக்களப்பின் முன்னாள் தளபதி ரமேசை இரத்தம் சொட்டச்சொட்ட அணுவணுவாய் கொலை செய்தமை பறாஜ் குண்டுகளாலும், கொத்துக் குண்டுகளாலும் எத்தனை ஆயிரம் குழந்தைகள், கர்ப்பிணித் தாய்மார்கள், வயோதிபர்கள், இளம் பெண்கள் என இரத்தம் குடித்து இராணுவம் கொன்று குவித்தது.

சிங்களப் படைகள் நடத்திய இனப்படு கொலை யுத்தத்தில் இரத்தம் இல்லாமல் எத்தனை தமிழர்கள் இறந்து போனார்கள்.

இவ்வளவும் நடந்த பின்னும் இராணுவம் இரத்தம் கொடுத்தது என்று சொல்ல ஆளுநருக்கு எந்த மனச்சாட்சி இடம் கொடுத்தது?

ஆதிகாலம் தொட்டே கொழும்பில் தமிழர்கள் வாழ்ந்துள்ளார்கள். பம்பலப்பிட்டி, வெள்ளவத்தை, கொட்டாஞ்சேனை என்ற பெயர்கள் ஏன் வந்தது?

ஆட்டுப்பட்டித்தெருவும், பொன்னம்பலவாணேச்சரமும் எவ்வாறு தோன்றியது பஞ்ச ஈச்சரங்களைப் பற்றியும், பௌத்த மதம் எப்போ வந்தது?

சைவத் தமிழர்கள் எப்போது வாழ்ந்தார்கள், கதிர்காமமும், கன்னியா வெந்நீரூற்றும் எப்படி விழுங்கப்பட்டது, திருகோணமலை மண் எவ்வாறு கபளீகரம் செய்யப்பட்டது, திருக்கோணேச்சர மலையில் புத்தர் எப்படி குடியேறினார்?

சமாதான காலத்தில் தமிழரின் வரலாற்று நிலமான திருகோணமலை நகரத்தில் புத்தர் சிலை வைக்கப்பட்டு சமாதானம் எவ்வாறு குலைக்கப்பட்டது என்பதைப் பற்றியெல்லாம் ஆளுநர் அறிந்து படிக்க வேண்டும்.

அதே போல் இன்று கொக்கிளாய் கருநாட்டு கேணியில் விநாயகர் கோயில் அழிக்கப்பட்டு புத்தருக்கு அடாத்தாக கோயில் அமைக்கப்படுகிறது.

ஒரு காலமும் சிங்களவர் வாழ்ந்திராத, அவர்களின் கால்த்தடமே பட்டிராத நாவற்குழியில் புத்தர் கோயில் எவ்வாறு கட்டப்படுகிறது?

முல்லைத்தீவு செம்மலையில் தொல்பொருள் என்ற போர்வையில் 50 ஏக்கர் காணியில் எவ்வாறு புத்தர் குடியேற முடியும்?

திருக்கேதீச்சரத்தில் பத்து ஏக்கர் காணியில் என்றுமே இல்லாத புத்தர் இப்போது எப்படி வந்தார்? சிவனொளிபாதம் இன்று புத்தபாதஸ்தானமாக எப்படி மாற்றம் பெற்றது?

குருந்தூர் மலையில் புத்தர் குடியேறத் துடிப்பது எப்படி? வெடுக்குநாறி மலையை பிளக்க முனைவது எவ்வாறு? என்பதை பற்றியெல்லாம் சிந்திக்க வேண்டியது கட்டாயமானது.

இந்த நாட்டிலே இனவாதம் இல்லையென்றால் இலங்கைக்கு புகழ் சேர்த்த முத்தையா முரளிதரனுக்கும் இப்போது இலங்கைக்கு புகழ் சேர்க்கும் தர்ஜினிக்கும், எழிலேந்தினிக்கும் ஏன் கப்டன் அந்தஸ்து வழங்கவில்லை? காரணம் இனவாதம் தான்.

கப்டன் போயாகொடவுடன் கடலில் பிடிபட்ட கடற்படைக் கைதியின் மனைவி, அவரைப் பார்க்க வந்த போது கருத்தரித்த அப்பெண்ணுக்காக அவ்வீரரையே விடுதலை செய்த பிதாமகன் தான் பிரபாகரன் என்பதும், அதே தலைவனின் பச்சிளம் குழந்தைக்கு பிஸ்கட் கொடுத்து கொலை செய்தவர்கள் சிங்கள இராணுவத்தினரே என்பதும் ஆளுநர் அறிந்திருக்க வேண்டிய உண்மைகள்.

உங்களது கண்டி மக்கள் குலபேதம், சாதிபேதம் பார்த்துத் தானே மத்திய மாகாணத்தில் நீங்கள் காலடி வைப்பதை அனுமதிக்கவில்லை.

இந்த திறனில் நீங்கள் குலபேதம், சாதிபேதம், இனவாதம் பற்றியெல்லாம் வகுப்பெடுப்பதை குறைத்து கொள்வது பொருத்தமானதாக இருக்கும் என தமிழ்மக்கள் கருதுகிறார்கள் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் சி. சிறீதரன் தெரிவித்துள்ளார்.

Latest Offers