சம்பந்தன் மட்டும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைத்துவம் அல்ல!

Report Print Kumar in அரசியல்

அரசியல் தீர்வினை வென்றெடுப்பதினை தடுப்பில் சிங்கள தரப்பில் இருந்து மட்டுமல்லாமல் தமிழர் தரப்பில் இருந்தும் திரைமறைவில் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தமிழீழ விடுதலை இயக்கத்தின்(டெலோ) பொதுச்செயலாளர் சிறிக்காந்தா தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு ஆனைப்பந்தியில் உள்ள தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

கூட்டமைப்பினை விமர்சனம் செய்தவதில் முனைப்புக்காட்டும் தமிழ் கட்சிகள் தமிழ் மக்களுக்கான எந்த தீர்வினையும் முன்வைப்பதும் இல்லை, வெளிப்படுத்துவதும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

தமிழர்கள் ஒன்றுபட்டே பயணிக்கவேண்டும். தமிழர்களின் ஒற்றுமையினை காட்டிக்கொடுப்பவர்களுக்கு மக்கள் தகுந்த பாடத்தினை புகட்டுவார்கள்.

சம்பந்தன் மட்டும் கூட்டமைப்பின் தலைமைத்துவம் அல்ல. அதில் மூன்று அங்கத்துவ கட்சிகள் பிரதானமாக இருக்கின்றது. சம்பந்தன் கூட்டமைப்பின் தலைவராக இருந்தாலும்கூட கூட்டுப்பொறுப்பு இருக்கின்றது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை தமிழ் மக்களுக்கு துரோகமிழைக்காமல் கொடுத்த வாக்குறுதியை மீறாமல் நேர்மையுடன் நம்பிக்கையுடன் செயற்பட்டுவருகின்றது.

85வயதிலும் சம்பந்தன் தனது உடல்நிலையினையும் கருத்தில்கொள்ளாது அரசியலில் உள்ளார் என்பது தயவுசெய்து அவரை விமர்சிப்பவர்கள் உணர்ந்துகொள்ளவேண்டும்.

அரசியல் தீர்வுத்திட்டம் தொடர்பில் தனியாக கூட்டமைப்பின் தலைமையோ சம்பந்தன் மாத்திரம் கையாண்டு தீர்வுகாணும் பிரச்சினையில்லை.

இந்த நாடு சுதந்திரமடைந்த காலம் தொடக்கம் இந்த பிரச்சினை இருந்துவருகின்றது. இந்த பிரச்சினையின் விளைவாக பாரிய யுத்ததினை முழு நாடும் சந்தித்துள்ளது.

இந்த பின்னணியில் ஒரு அரசியல் தீர்வினை காணுவது என்பது தென்னிலங்கையில் சிங்கள பௌத்த இனவாதம் என்பது இன்னும் தனது தீவிரத்தினை மட்டுப்படுத்தக்கூட இல்லாத நிலையில் தீவிரம் காணும் நிலையில் அரசியல் தீர்வு என்பது இலகுவானது அல்ல என்றும் சிறிக்காந்தா குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers