இலங்கையில் பிறந்து இந்தியாவில் பிரகாசித்த எம்.ஜி.ஆர் ஒரு பொக்கிஷம்: சபாநாயகர் புகழாரம்

Report Print Thirumal Thirumal in அரசியல்

மீனவர்களும் வாழ்க்கை போராட்டத்தில் தான் இருக்கின்றார்கள், அவர்களின் பிரச்சினை மனிதநேய அடிப்படையில் நோக்கப்பட வேண்டும் என சபாநாயகர் கரு ஜெயசூரிய தெரிவித்துள்ளார்.

மறைந்த தமிழக முதலமைச்சர் எம்.ஜி. இராமச்சந்திரனின் 102ஆவது பிறந்த தின நிகழ்வுகள் அவர் பிறந்த ஊரான கண்டியில் நேற்று நடைபெற்றது.

இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில்,

இலங்கை நாட்டில் பிறந்து இந்தியாவில் பிரகாசித்த எம்.ஜி.ஆர் அவர்களை பாராட்டுவது எங்களது கடமை என நான் நினைத்தேன். நாங்கள் மிக அன்பாக போற்றுகின்ற எம்.ஜி.ஆர் அவர்களை ஒரு பொக்கிஷமாக நாங்கள் தமிழகத்திற்கு கொடுத்திருக்கின்றோம்.

நாங்கள் எந்த சந்தர்ப்பத்திலும் அவரை பிரித்து பார்க்கவிரும்பவில்லை. எங்களில் ஒருவராகவே எம்.ஜி.ஆரை பார்க்கின்றோம்.

அதேபோன்று எங்களுடைய தமிழக கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அவர்களுடைய இலங்கை விஜயமானது வரலாற்றில் இடம்பெறக்கூடிய ஒரு சிறப்பு நிகழ்வாக நான் அறிவிக்கின்றேன்.

இலங்கைக்கும் தமிழகத்திற்கும் இடையில் சில கருத்து வேறுபாடுகள் இருந்தன. அந்த கருத்து வேறுபாடுகள் காரணமாக எங்களது உறவு பாலத்தில் பல்வேறு மாற்றங்களும், தாக்கங்களும் ஏற்பட்டிருந்தன.

ஆனால் இப்போது நினைத்து பார்க்கின்றேன். அன்று அவ்வாறான ஒரு சூழ்நிலை எற்படாமல் இருந்திருந்தால் இன்று நாங்கள் இருக்கின்றதை விட மிக சந்தோஷமாக இருந்திருக்கலாம்.

இலங்கை அரசு என்ற ரீதியிலும், உயர்மட்ட ரீதியான ஒரு குழுவினராக நாங்கள் தமிழ்நாட்டிற்கு சென்று தமிழகத்துடைய எல்லா தலைவர்களையும் பார்த்து எங்களுடைய நல்லெண்ண முயற்சிகளை வலுவடைய செய்வோம் என நம்பிக்கை தெரிவித்தார்.