இராமருக்கு அணில் உதவியதைப் போல யாழ். நூலகத்திற்கு நான் உதவியதால் மகிழ்ச்சி! இந்திய அமைச்சர்

Report Print Sumi in அரசியல்

இலங்கையில் கல்வியை உயர்த்துவதற்கு, தமிழக அரசு மட்டுமன்றி மத்திய அரசாங்கமும், பல உதவித் திட்டங்களை நடைமுறைப்படுத்தும் என்பதுடன், யாழ்ப்பாணத்தில் ஆராய்ச்சி நிலையங்களை அமைக்க தமிழக முதலமைச்சருடன் கலந்துரையாடி உரிய நடவடிக்கை முன்னெடுக்கப்படுமென தமிழ்நாட்டு கல்வி அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் உறுதியளித்தார்.

யாழ். பொது நூலகத்திற்கு 50,000 புத்தகங்களை வழங்கும் நிகழ்வில் இன்று கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

நாடு வளம்பெற வேண்டுமாயின், ஒரு பகுதி வளம்பெற வேண்டுமாயின் கல்வியினால் தான் வளம்பெறும் என எமது முன்னோர்கள் சொல்லியிருக்கின்றார்கள். தமிழ் நாட்டு அரசைப் பொறுத்தவரையில், தமிழக முதலமைச்சரும், துணை முதலமைச்சரும், இந்த செயற்திட்டம் தொடர்பாக தெரிவித்த போது, சென்று வருமாறு அனுமதி வழங்கினார்கள்.

அமைச்சரவை என்பது கூட்டு முயற்சி, இராமர் இலங்கை வருகின்ற போது, பாலம் அமைப்பதற்கு அணில் உதவி செய்ததைப் போன்று, யாழ்ப்பாண நூலகம் சிறப்பாக இயங்குவதற்கு அணிலாக இருந்து இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளேன் என்பதில் பெரும் மகிழ்ச்சியடைகின்றேன்.

அம்மாவின் வழிகாட்டலில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற இந்த அரசு, மேலும் பணிகளை முன்னெடுக்கும். யாழ்ப்பாணத்தில் வாழும் மக்களின் நலன்கருதி பல உதவித்திட்டங்களை முன்னெடுக்க நடவடிக்கை எடுத்து வருகின்றோம்.

அதேநேரம், மலேசியா உள்ளிட்ட நாடுகளில் வாழும் தமிழர்கள் தமக்கும் நூல்கள் வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார்கள். அவர்களின் கோரிக்கைகளுக்கு அமைவாக நூல்களை வழங்க ஏற்பாடுகள் செய்து வருகின்றோம்.

இந்த அரசாங்கத்தினால் நல்ல கல்வியாளர்களை உருவாக்க முடியும். மத்திய அரசாங்கம் மாகாண அரசாங்கமும், ஒருங்கிணைந்து இந்தப் பணிகளை முன்னெடுத்து வருகின்றார்கள்.

இலங்கைப் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் மோடிம் இணைந்து பல செயற்திட்டங்களை முன்னெடுக்கவுள்ளனர். அதற்கு தமிழக அரசும் ஒத்துழைப்பும் உறுதுணையாகவும் இருக்குமென்றும் தெரிவித்தார்.

இந்தியாவில் உள்ள ஆராய்ச்சி மையங்கள் போன்று, யாழ்ப்பாணத்திலும் ஆராய்ச்சி மையம் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசா பிரதி அமைச்சர் அங்கஜன் இராமநாதன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழக முதலமைச்சருடன் கலந்துரையாடி உரிய நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என்று செங்கோட்டையன் உறுதியளித்தார். யாழ்ப்பாணத்தில் உள்ள பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி மையங்களை அமைப்பதற்கு உதவ வேண்டுமென கல்வி அமைச்சர் விடுத்த வேண்டுகோளையும், தமிழக முதலமைச்சரிடம் தெரிவித்து உரிய நடடிக்கை முன்னெடுக்கப்படுமென்றும் உறுதியளித்ததுடன், அடிமட்டத்தில் இருப்பவர்களை உயர்த்துவதற்கு கல்வியால் மாத்திரமே முடியும், அந்த கல்வியை மேம்படுத்த தமிழக அரசு எப்போதும் உறுதியாக இருக்கும் என்றார்.