அரசாங்கம் மகிந்தவை போல் சர்வாதிகாரமாக செயற்படாது - ஜே.சி. அலவத்துவல

Report Print Steephen Steephen in அரசியல்

நாட்டின் தற்போதைய அரசாங்கம், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் அரசாங்கத்தை போல் சர்வாதிகாரமாக செயற்படாது என இராஜாங்க அமைச்சர் ஜே.சி. அலவத்துவல தெரிவித்துள்ளார்.

கோட்டேயில் உள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் உலக சந்தையின் விலைகளுக்கு ஏற்ப இலங்கையில் எரிபொருட்களின் விலைகளை குறைக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது..

ஆனால் அவரது அரசாங்கம் விலைகளை குறைக்கவில்லை. போர் முடிந்த பின்னர், மக்களுக்கு நிவாரணங்களை வழங்குவதாக கூறி மகிந்த ராஜபக்ச போர் முடிந்து கடந்த 2014 ஆம் ஆண்டு வரை எரிபொருட்களின் விலையை 5 சதத்தினாலும் குறைக்கவில்லை.

ஆனால் எமது அரசாங்கம் அப்படியல்ல, ஆட்சிக்கு வந்து இரண்டரை வருடங்கள் முடிந்தளவுக்கு எரிபொருள் நிவாரணத்தை வழங்கினோம்.

அரசாங்கம் விலை சூத்திரத்தை அறிமுகப்படுத்தி, உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரிக்கும் போது உள்நாட்டு சந்தையில் அதிகரிப்பதை போல், உலக சந்தையில் விலை குறையும் போது உள்நாட்டு சந்தையிலும் விலை குறைக்கப்பட்டு அந்த நிவாரணம் மக்களுக்கு வழங்கப்படும் என்பதை அரசாங்கம் என்ற வகையில் பொறுப்புடன் கூறுகிறேன்.

எதிர்வரும் ஜனவரி மாதம் உலக சந்தையில் எரிபொருளின் விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த விலை குறைப்பின் நிவாரணத்தை நாங்கள் நாட்டு மக்களுக்கு பெற்றுக்கொடுப்போம்.

விலை சூத்திரத்தின்படி விலைகள் கூடி குறையும் போது அத்தியவசிய பொருட்களுக்கு நிரந்தர விலைகளை நிர்ணயிப்பது குறித்து அரசாங்கம் கலந்துரையாடி வருகிறது எனவும் ராஜாங்க அமைச்சர் ஜே.சி. அலவத்துவல குறிப்பிட்டுள்ளார்.