மாகாணசபையிலாவது மக்களாட்சி இடம்பெறவேண்டும்: தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி வலியுறுத்தல்

Report Print Kumar in அரசியல்

மக்கள் ஆட்சிமூலம் ஜனநாயகத்தினை நிலைநாட்டும் வகையில் மிக விரைவில் மாகாணசபை தேர்தல்களை நடத்த நல்லாட்சி அரசாங்கம் ஏற்பாடுகளை செய்யவேண்டும் என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச்செயலாளர் பூ.பிரசாந்தன் கோரிக்கை விடுத்துள்ளார்.

நேற்று மாலை அவரது அலுவலகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

30 வருடகாலமாக ஆயுதம் ஏந்தி போராடி, எதுவும் கிடைக்காத சூழலில் குறைந்த அதிகாரத்துடன் கிடைத்த மாகாணசபையிலாவது மக்களால் தெரிவு செய்யப்பட்ட மக்களாட்சி நடைபெறவேண்டும்.

கிழக்கு மாகாணசபை கலைக்கப்பட்டு ஒரு வருடத்தைக் கடந்துள்ள நிலையில் மாகாணசபை தேர்தல் தொடர்பில் எந்தவிதமான திட்டவட்டமான அறிவிப்பும் இல்லாமல் மாகாணத்தில் மக்கள் பிரதிநிதிகள் ஆட்சி செய்ய முடியாத சூழல் தொடர்ந்து இருந்து வருகின்றது.

நாடாளுமன்றத்திலும் அரசியல் மேடைகளிலும் ஒரு பேசுபொருளாக மட்டுமே மாகாணசபை தேர்தல் பேசப்படுகின்றதே தவிர இன்று வரையில் தீர்க்கமான முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை.

மாகாணசபை தேர்தல் தொடர்ந்து இழுபறியில் இருப்பதானது ஜனநாயகத்திற்கு முரண்பாடான கருத்துகளுக்கு எதிர்கால சமூகத்தினை வழிநடத்தும் செயற்பாடாக இருக்கின்றது.

ஜனநாயக ரீதியாக மிக விரைவில் மாகாணசபை தேர்தல் நடத்தப்பட வேண்டும். கிழக்கு மாகாணத்தில் தற்போது தமிழ் மக்கள் எதிர்கொண்டுள்ள நில நிர்வாக பிரச்சினைகளுக்கு முடிவுகட்ட வேண்டுமாகவிருந்தால் மாகாணசபை தேர்தல் மிக விரைவாக நடத்தப்படவேண்டும்.

இன்று பழைய முறையில் தேர்தல் நடத்துவதா,புதிய முறையில் தேர்தல் நடத்துவதா என்ற வகையில் கால இழுத்தடிப்புகள் செய்யப்படுகின்றன.

கடந்த காலத்தில் புதிய முறையில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என மாகாணசபையிலும் நாடாளுமன்றத்திலும் கையை உயர்த்தியவர்கள் அந்த முறைமை வேண்டாம் எனவும் அதனை மீள்பரிசீலனை செய்யவேண்டும் எனவும் கையை உயர்த்தியுள்ளனர்.

இவ்வாறான இரட்டை வேடத்தினைப்போடாமல் மக்களின் பணத்தினைக்கொண்டு பல குழுக்கள் அமைக்கப்பட்டு பல ஆய்வுகளை செய்து பணத்தினை வீண்விரயம் செய்துவிட்டு மீண்டும் பழைய முறைக்கு செல்வோம் என்று ஒரு சாரார் குறிப்பிடுவது வேடிக்கையான விடயமாக இருக்கின்றது.

எது எப்படி என்றாலும் பழைய முறையிலாவது புதிய முறையிலாவது மாகாணசபை தேர்தல் நடத்தப்பட வேண்டும். அப்போதுதான் அங்கு மக்களாட்சி நிலைநிறுத்தப்படும்.

அரச இயந்திரத்தினை சுழற்றும் சக்தியாக மக்கள் சக்தி இருக்கும். மிக விரைவில் மாகாணசபை தேர்தலை நடத்தும் ஏற்பாடுகளை நல்லாட்சி அரசாங்கம் செய்யவேண்டும் என்பது தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் கோரிக்கையாகவுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.