போராட்டம் கொழும்பை நோக்கி நகரும்! சிங்கள மக்களையும் திரட்டுவோம்

Report Print Navoj in அரசியல்

மட்டக்களப்பு தண்ணீர் தொழிற்சாலையை மூடுவது தொடர்பில் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை பொறுப்பு வாய்ந்தவர்கள் மேற்கொள்ளாவிட்டால் போராட்டம் கொழும்பை நோக்கி நகரும் என மட்டக்களப்பு தமிழ் உணர்வாளர்கள் அமைப்பின் தலைவர் கணபதிப்பிள்ளை மோகன் தெரிவித்துள்ளார்.

குறித்த தண்ணீர் தொழிற்சாலை குறித்து தமிழ் உணர்வாளர்கள் அமைப்பின் அடுத்தகட்ட செயற்பாடு தொடர்பாக செங்கலடியில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

புல்லுமலையிலே அமைக்கப்படும் தண்ணீர் தொழிற்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த மாதம் ஏழாம் திகதி மட்டக்களப்பில் ஹர்த்தால் மேற்கொள்ளப்பட்டது. அனைத்து மக்களும் மிகவும் உணர்வுபூர்வமாக இந்த ஹர்த்தாலை அனுஸ்டித்தார்கள்.

இதன்மூலம் தண்ணீர் தொழிற்சாலையை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்பது வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

இதில் குறிப்பிடப்பட வேண்டிய விடயம் நகர்புறங்களை தாண்டி கிராமங்களில் சிறிய வியாபார கடைகள் கூட மூடப்பட்டிருந்தன. இது பலரையும் ஆச்சரியப்படுத்திய விடயம்.

கூலித் தொழிலாளிகள், விவசாயிகள், பாடசாலை மாணவர்கள், அரசாங்க உத்தியோகத்தர்கள் என பலரும் இதற்கான ஆதரவை வழங்கியிருக்கின்றார்கள்.

எனவே இந்த தண்ணீர் தொழிற்சாலையுடன் சம்பந்தப்பட்டவர்கள் அனைவரும் எமது மக்களின் இந்த வெளிப்பாட்டினை ஏற்று தொழிற்சாலையின் அமைப்பு பணிகளை நிறுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.

அத்துடன், நாங்கள் சாத்வீக வழிகளில் இந்த தண்ணீர் தொழிற்சாலைக்கு எதிராக போராடிக் கொண்டிருக்கின்றோம்.

எனினும் இது தொடர்பில் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ளாவிட்டால் இரண்டொரு வாரங்களில் எமது போராட்டம் கொழும்பை நோக்கி நகரும்.

கொழும்பில் இருக்கின்ற சிங்கள மக்களையும், பௌத்த அமைப்புகளையும் ஒன்று திரட்டி பாரிய ஆர்ப்பாட்டமாக இதனை நாம் நடத்துவோம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.