முதலமைச்சர் விக்னேஸ்வரன் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு! நீதிமன்றில் நடந்தது என்ன?

Report Print Rakesh in அரசியல்

வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் மற்றும் இரு மாகாண அமைச்சர்கள் ஆகியோருக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை அடுத்த மாதம் 16 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்க கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது.

குறித்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கானது வடக்கு மாகாண சபை உறுப்பினர் டெனீஸ்வரனினால் தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன் நீதியரசர்கள் ஜனக் டி சில்வா, குமுதினி விக்கிரமசிங்க ஆகியோர் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

இந்த வழக்கு தொடர்பில் நீதிமன்றத்தின் நியாயாதிக்கம் சம்பந்தமாக விக்னேஸ்வரன் தரப்பில் பூர்வாங்க ஆட்சேபனை கிளப்பப்பட்டமையை அடுத்து, அது தொடர்பான விசாரணை நேற்று காலை முழுவதும் நடைபெற்றுள்ளது.

விக்னேஸ்வரன் தரப்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி கனகேஸ்வரன் எதிர்வரும் 28 ஆம் திகதி வரை வழக்கை ஒத்திவைக்குமாறு கோரியுள்ளார். இருப்பினும், குறித்த கோரிக்கையை நிராகரித்த நீதியரசர்கள், வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளனர்.

குற்றம் சுமத்தப்பட்ட முதலமைச்சர் விக்னேஸ்வரன், மாகாண அமைச்சர்கள் சிவநேசன், அனந்தி சசிதரன் ஆகியோருக்கு நீதிமன்ற குற்றப்பத்திரத்தை கையளித்து குற்றவாளியா, சுற்றவாளியா என வினவத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அப்போது கனகேஸ்வரன், “இந்த வழக்கை விசாரிப்பதற்கு இந்த நீதிமன்றத்துக்கு நியாயாதிக்கம் இல்லை என்ற அடிப்படையில் தாம் பூர்வாங்க ஆட்சேபனை ஒன்றைக் கிளப்புகின்றார்” எனத் தெரிவித்துள்ளார்.

அந்த ஆட்சேபனையைப் பரிசீலனைக்கு ஏற்றுக்கொண்ட நீதியரசர்கள், கனகேஸ்வரன் வாதாடுவதற்கும் சட்ட ஆதாரங்களை முன்வைப்பதற்கும் அனுமதி அளித்துள்ளனர்.

கனகேஸ்வரன், 'உயர் நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றங்களில் நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளை எப்படி நடத்துவது என்பது தொடர்பான படிமுறைகள், சட்ட ஏற்பாடுகள், நடைமுறை ஒழுங்கு விதிகள் என்பன இன்னும் வகுக்கப்படவில்லை.

அப்படி வகுக்கப்படாத நிலையில் அவமதிப்பு வழக்குகளை உயர் நீதிமன்றமோ, மேன்முறையீட்டு நீதிமன்றமோ கையாள முடியாது" என்ற அடிப்படையில் தமது வாதத்தை நேற்று பகல் முழுவதும் முன்வைத்துள்ளார்.

நீதியரசர்கள், “அப்படியானால் இலங்கை உயர்நீதிமன்றமும், மேன்முறையீட்டு நீதிமன்றமும் நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளை விசாரணை செய்யவே முடியாதா? இதுவரை காலமும் அத்தகைய வழக்குகள் இந்த நீதிமன்றங்களில் விசாரிக்கப்பட்டு காலத்துக்கு காலம் தீர்ப்புகளும் வழங்கப்பட்டுள்ளனவே!” என சுட்டிக்காட்டியுள்ளனர்.

அது தவறு என்று பதிலளித்த கனகேஸ்வரன், “நீதிமன்ற நடைமுறைக்கான சட்டக் கோவையோ, சட்டங்களோ இல்லாமல் இத்தகைய வழக்குகளை விசாரிக்க முடியாது என்பதை முன்னைய வழக்குகளில் சம்பந்தப்பட்டோர் கவனியாமல் விட்டிருக்கலாம். ஆனால், நான் இதனை இப்போது நீதிமன்றத்தில் எமது வாதமாக முன்வைக்கின்றேன்” என கூறியுள்ளார்.

அவரது வாதத்தை செவிமடுத்த நீதியரசர்கள் வழக்கை எதிர்வரும் ஒக்டோபர் 16 ஆம் திகதிக்கு ஒத்தி வைத்துள்ளனர்.

அன்றைய தினம் இந்தப் பூர்வாங்க ஆட்சேபனை மீது மற்றைய இரு எதிர்மனுதாரர்களான அனந்தி சசிதரன், சிவநேசன் ஆகியோரின் சட்டத்தரணிகளும் மற்றொரு எதிர்மனுதாரரான டாக்டர் சத்தியலிங்கத்தின் தரப்பு சட்டத்தரணியான எம்.ஏ.சுமந்திரனும் வாதம் செய்யவுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.

அதன் பின்னர் இந்த பூர்வாங்க ஆட்சேபனை நீதிமன்றத்தின் முடிவின் அடிப்படையில் வழக்கு விசாரணை தொடரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குற்றஞ்சாட்டப்பட்ட விக்னேஸ்வரன், அனந்தி சசிதரன், சிவநேசன் மற்றும் மனுதாரரான டெனீஸ்வரனும் நேற்றைய வழக்கில் நீதிமன்றில் முன்னிலையாகி உள்ளனர்.

Latest Offers