யாழ்ப்பாணத்தில் பாதுகாப்பு சிறப்பாக உள்ளது - அமைச்சர் ராஜித

Report Print Steephen Steephen in அரசியல்

யாழ்ப்பாணத்தில் பாதுகாப்பு தொடர்பில் எந்த பிரச்சினைகளும் இல்லை எனவும், அங்கு பாதுகாப்பு சிறப்பான முறையில் இருப்பதாக பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளதாகவும் அமைச்சர் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில், ஊடகவியலாளர் ஒருவர், யாழ்ப்பாணத்தில் பாதுகாப்பற்ற நிலைமை நிலவுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்திருந்தமை குறித்து அமைச்சரிடம் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளிக்கும் அமைச்சர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

மேலும் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் நடத்திய விசாரணைகளில் வெளியான தகவலுக்கு அமையவே கூட்டுப் படைகளின் தலைமை அதிகாரி ரவிந்திர விஜேகுணரத்னவிடம் விசாரணை நடத்தும் தேவையேற்பட்டுள்ளது.

நேவி சம்பத் கைதுசெய்யப்பட்டு நடத்தப்பட்ட விசாரணைகளில் வெளியான தகவலுக்கு அமைய இந்த நகர்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

நீதிமன்றத்தில் நடந்துவரும் 11 பிள்ளைகளை கடத்திச் சென்று கொலை செய்த சம்பவம் தொடர்பான வழக்கில் ரவிந்திர விஜேகுணரத்ன தொடர்புப்படுத்தப்படவில்லை. கொலைகளுக்கும் இவருக்கும் சம்பந்தமில்லை.

நேவி சம்பத் என்ற நபருக்கு பாதுகாப்பு வழங்கினார், அவர் வெளிநாட்டு தப்பிச் செல்ல உதவினார் என்ற பிரச்சினை இங்குள்ளது. இது விசாரணைகளில் மேலெழுந்த பிரச்சினை.

அவர் முக்கியமான குற்றச்சாட்டோடு தொடர்புப்படுத்தப்படவில்லை. ரவிந்திர விஜேகுணரத்ன மட்டுமல்ல படை தளபதிகளுக்கு இந்த பிரச்சினை உள்ளது.

எக்னேலிகொட தொடர்பான சம்பவதுடன் தொடர்புடையவர்களை கைதுசெய்யும் போது படையினரை வேட்டையாடுவதாக கூறுகின்றனர். இராணுவத்தினரை கைதுசெய்யும் போதும் இதனையே கூறுகின்றனர்.

மறுபுறம் கொலைக்காரன் படைவீரனாக இருக்க மாட்டான் படை வீரன் கொலைக்காரனாக இருக்கமாட்டான் என இராணுவ தளபதி கூறுகிறார்.

ஒவ்வொருவரிடம் சாட்சியங்களை பதிவு செய்து, அந்த சாட்சியங்களின் அடிப்படையிலேயே வழக்கு ஒன்றின் விசாரணை முன்னெடுத்துச் செல்லப்படும்.

இதனை விடுத்து ஒருவரின் சாட்சியை அடிப்படையாக கொண்டு விசாரணைகளை நடத்த முடியாது. அப்படியான விசாரணைகள் கடந்த அரசாங்கத்தின் காலத்தில் நடத்தப்பட்டது.

விசாரணைகள் நடத்தி, சட்டமா அதிபரின் அனுமதியில்லாமல் எவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த வேண்டாம் என விசாரணைகள் ஆரம்பிக்கப்படும் போதே பிரதமர் ஆலோசனை வழங்கியிருந்தார்.

விசாரணைகள் சரியாக நடத்தப்படவில்லை என்றால், சாட்சியங்கள் போதவில்லை. மேலும் சாட்சியங்களை பதிவு செய்யுங்கள் என்று சட்டமா அதிபர் கூறுவார்.

இதன் காரணமாக பொலிஸ் உட்பட விசாரணை நடத்தும் தரப்பினர் நீதிமன்றத்திற்கு செல்லும் முன்னர் சட்டமா அதிபரை திருப்தியடையும் வரையில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் எனவும் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார்.