நந்திக்கடலில் வழங்கப்பட்டதே அரசியல் தீர்வு! மேலும் தீர்வுகள் அவசியமில்லை

Report Print Steephen Steephen in அரசியல்

இலங்கைக்குள் இனப் பிரச்சினை என்று எதுவுமில்லை. நந்திக்கடலில் வழங்கப்பட்டது அரசியல் தீர்வு என்பதால், மேலும் தீர்வுகள் அவசியமில்லை என்று பேராசிரியர் சந்தன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

உலக தேசப்பற்றுள்ள இலங்கையர் பேரவையின் சார்பில் மனித உரிமை பேரவையில் கலந்துக்கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

இதன்போது, தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

தமிழ் வேளாள தலைவர்களின் இனவாத நோக்கங்கள் மற்றும் போலியான வரலாறு காரணமாக அனைத்து இலங்கையர்களின் மனித உரிமைகளும் மீறப்பட்டுள்ளன.

இலங்கை சம்பந்தமாக தமிழ் இனவாதிகள் உருவாக்கியுள்ள மாயையான வரலாறு அனைத்து இலங்கையர்களின் மனித உரிமைகளையும் மீறியுள்ளது.

கி.பி. 13 ஆம் நூற்றாண்டுக்கு பின்னர் இலங்கையில் தமிழர்களுக்கு நிரந்தரமான வாழ்விடங்கள் இருக்கவில்லை என யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத்துறை பேராசிரியர் கார்த்திகேசு இந்திரபாலா உட்பட கல்விமான்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

16 ஆம் நூற்றாண்டில் போத்துகேயர் இலங்கைக்கு வரும் போது யாழ். குடா நாடு உட்பட முழு இலங்கையிலும் சிங்களவர்களே பெரும்பான்மையாக இருந்தனர் என்பது க்வேரோஸ் என்ற கத்தோலிக்க மத குருவின் அறிக்கை மூலம் தெளிவாகியுள்ளது.

1650 ஆம் ஆண்டு இலங்கையின் கரையோர பிரதேசங்களை ஆட்சி செய்த ஒல்லாந்தர், யாழ்ப்பாணத்தில் புகையிலை பயிர் செய்வதற்காக தமிழ் வேளாளர்களை தற்போதைய தமிழ் நாட்டின் கோரமண்டலம் கரையோரத்தில் இருந்து அழைத்து வந்தனர்.

1815 ஆம் ஆண்டு இலங்கையில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய ஆங்கிலேயர், ஏனைய இனங்களை விட தமிழ் வேளாளர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தனர்.

1833 ஆம் ஆண்டு முதலாவது சட்டவாக்க சபை அமைக்கப்பட்ட போது நாட்டின் வரலாறு மற்றும் இனங்களின் விகிதாசாரம் பற்றி எந்த கவனத்தை செலுத்தாத ஆங்கிலேயர், சிங்கள, தமிழ், பறங்கியர் சார்பில் பிரதிநிதிகளை நியமித்தனர்.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக நாட்டின் இனம், மொழி, கலாசாரத்தை உருவாக்கி, மொத்த சனத் தொகையில் 75 வீதத்தை சிங்களவர்களே பிரதிநிதித்துவப்படுத்தினர்.

சிங்களவர்களை போன்று 200 வருடங்கள் கூட வரலாற்றை கொண்டிராத முழு சனத் தொகையில் 10 வீதமான தமிழ் மக்களுக்கு, எந்த ஜனநாயக அடிப்படைகளும் இன்றி சட்டவாக்க சபையில் சமமான பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டது.

பிரித்தானிய ஆட்சியாளர்களின் ஆசிர்வாதத்தை பெற்றிருந்த தமிழ் வேளாள தலைவர்களுக்கு முழு நாட்டிற்கும் தலைவர்களாகும் தேவை இருந்தது.

1931 ஆம் ஆண்டு சர்வஜன வாக்குரிமை அறிமுகப்படுத்தப்பட்டால், அவர்களால் முழு நாட்டிற்கு தலைவராக முடியாது என்பதை வேளாள தலைவர்கள் உணர்ந்துக்கொண்டனர்.

இதனால், குறைந்தது வடக்கு, கிழக்கு மாகாணங்களின் ஆட்சியாளர்களாக மாறும் தேவை அவர்களுக்கு ஏற்பட்டது. இதுதான் பிரிவினைவாத அமைப்பின் ஆரம்பம்.

இலங்கையில் தமிழ் மக்களுக்கு எந்த அநீதியும் ஏற்படாத சூழ்நிலையிலேயே தமிழ் பிரிவினைவாதம் ஆரம்பிக்கப்பட்டது. தமிழ் வேளாளர்களுக்கு நாடு முழுவதுக்குமான தலைவர்களாக முடியாது போனதே இதற்கு காரணம்.

இதேவேளை, 2009 ஆம் ஆண்டு முழு தமிழ் இனவாத அமைப்பும் நந்திக்கடலில் போரில் தோற்கடிக்கப்பட்டதன் மூலம் அரசியல் தீர்வு வழங்கப்பட்டது.

இதனால், தொடர்ந்தும் தீர்வுகள் பற்றி பேசுவதில் அர்த்தமில்லை. இலங்கையின் உண்மையான வரலாற்றை ஆராய்ந்தால், இலங்கைக்குள் இனப்பிரச்சினை என்று எதுவுமில்லை எனவும்பேராசிரியர் சந்தன ஜயசுமன குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers