இருபதாம் திருத்தச் சட்டம் மஹிந்தவுக்கான இன்னொரு வாய்ப்பு! அனுரகுமார திசாநாயக்க

Report Print Aasim in அரசியல்

உத்தேச 20ம் திருத்தச் சட்டம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கு இன்னொரு வாய்ப்பைக் கொடுக்கும் வகையில் அமைந்திருப்பதாக அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) தலைவர் அனுரகுமார திசாநாயக்க இன்று மல்வத்துபீட மகாநாயக்கர் சங்கைக்குரிய திப்படுவாவே சுமங்கல தேரரை சந்தித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வௌியிடும்போது இதனைத் தெரிவித்துள்ளார்.

அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அனுர குமார எம்.பி.,

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவின் காலத்தில் இருந்தே நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிப்பது குறித்து பேசப்படுகின்றது. ஆனால் இன்று வரை அதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படவில்லை.

எந்தவொரு அரசியல் கட்சியும் அதற்கான அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் முயற்சிகளை மேற்கொள்ளவில்லை. அதன் காரணமாகவே ஜே.வி.பி. களத்தில் இறங்கியுள்ளது.

13ம் திருத்தச் சட்டத்தில் காணப்படும் எந்தவொரு சரத்தும் 20ம் திருத்தச் சட்டத்தின் மூலம் ரத்துச் செய்யப்படப் போவதில்லை. அதன் காரணமாக நாட்டில் அரசியல் நெருக்கடிகள் ஏதும் ஏற்படுவதற்கான வாய்ப்பும் இல்லை.

தனியொரு நபரிடம் அதிகாரங்கள் குவிந்திருப்பதை தடுப்பதே 20ம் திருத்தச் சட்டத்தின் நோக்கமாகும். 13ம் திருத்தச் சட்டம் நடைமுறையில் இருந்த நிலையிலேயே 1994ம் ஆண்டும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை நீக்கும் யோசனை முன்வைக்கப்பட்டது.

20ம் திருத்தச் சட்டத்தை ரணில் உடன் இணக்கப்பாட்டின் அடிப்படையில் நாங்கள் முன்வைத்திருப்பதாக பலரும் குற்றம் சாட்டுகின்றனர்.

ஆனால் விமல் வீரவங்ச மற்றும் ஷிரந்தி ராஜபக்‌ஷ போன்றோர் இன்று சட்டத்தின் பிடியில் இருந்து தப்பித்துக் கொண்டிருக்க பிரதமர் ரணில் விக்ரமசிங்க வழங்கிய அனுசரணையே காரணம் என்பதை யாரும் மறந்துவிடலாகாது. அவர்கள் தான் பிரதமருடன் இணக்கப்பாட்டு அரசியலை முன்னெடுத்துள்ளார்கள்

அப்படிப்பட்ட பிரதமர் ரணிலுடன் ஜே.வி.பி. ஒருபோதும் இணக்கப்பாட்டின் அடிப்படையில் செயலாற்ற முன்வராது என்றும் அனுரகுமார எம்.பி. தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.