ஆயுதம் தூக்கி போராடியவர்களை நாம் மறப்பதா? பெரும்பான்மை இன கட்சிகள் கூறும் விடயம்

Report Print Navoj in அரசியல்

ஆயுதம் தூக்கிப் போராடிய எமது பிள்ளைகளை நாம் மறப்பதா என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கம் கேள்வியெழுப்பியுள்ளார்.

ஏறாவூர்ப்பற்றுப் பிரதேசசபை உறுப்பினர் மு.முரளிதரனின் ஏற்பாட்டில் நேற்று சித்தாண்டியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் கூறுகையில்,

நாங்கள் தமிழர்களாக இருக்கின்ற ஒரே காரணத்திற்காக இலங்கை சுதந்திரம் அடைந்த நாள் முதல் புறக்கணிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றோம். பெரும்பான்மை இன கட்சிகள் எங்களுடன் வந்து சேருங்கள் எல்லாம் செய்து தருகின்றோம் என்று சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள்.

அதுபோன்றே எமது பகுதிகளிலும் சிலர், பெரும்பான்மைக் கட்சிகளில் இருந்து கொண்டு பெரும்பான்மைக் கட்சிகளுக்கு வாக்களித்தால் அனைத்து அபிவிருத்திகளையும் செய்து தருகின்றோம் என்கின்றார்கள்.

அப்படியாயின் பெரும்பான்மை சிங்களக் கட்சிகளுக்கு வாக்களிக்கின்ற சிங்களப் பகுதிகள் தற்போது தேவலோகமாக மாறியிருக்க வேண்டும் தானே. அப்படி நடக்கவில்லையே, இங்கே மட்டும் வந்து அவர்கள் தேவலோகமாக்கிவிடவா போகின்றார்கள். இங்கு வந்து அபிவிருத்தி என்ற மாயம் கூறி எமது இனத்தை சிதைப்பதே அவர்களின் நோக்கம்.

நீர்கொழும்பு, சிலாபம், புத்தளம், காலி, கதிர்காமம், மன்னம்பிட்டி இவ்வாறு தமிழர்கள் வாழ்ந்த பிரதேசங்கள் தற்போது எவ்வாறு இருக்கின்றன. அங்கே என்ன நடந்தது. அங்கே இருந்த தமிழர்கள், தாம் தமிழர்களாக இருக்க வேண்டும், தமிழ்ப் பண்பாடு மற்றும் கலாச்சாரத்துடன் வாழ வேண்டும் என்பதை மறந்தார்கள்.

அங்கிருந்த தலைமைகளும் பெரும்பான்மை வாசத்தில் கலந்து விட்டார்கள். சரியான தலைமைத்துவம் இல்லாமையால் அவ்விடங்கள் இல்லாமலே போய்விட்டன.

ஆனால் வடக்கு, கிழக்கில் மக்கள் தமிழ் உணர்வுடன் வாழ வேண்டும் என நினைத்தமையால், அத்துடன் அதற்கான சிறந்த தலைமைத்துவமும் உள்ளமையால் சிங்கள அரசு எமக்கு பல்வேறு விதமான ஆக்கினைகளையும், தொந்தரவுகளையும் செய்து கொண்டிருக்கின்றது.

எமது நிலத்தை சிங்களவர்கள் அபரிக்கின்றார்கள் என்பதால் தான் எமது பிள்ளைகள் ஆயுதம் தூக்கிப் போராடினார்கள். அவர்களை நாம் மறப்பதா? அவர்கள் வேறு வழியில்லாமல் ஆயுதம் தூக்கிப் போராடினார்கள். ஆனால் தற்போது நாங்கள் ஆயுதம் இல்லாமல் எமது வாக்குப் பலத்தினால் போராடிக் கொண்டிருக்கின்றோம் என குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers