நாங்கள் சரியாகச் செயற்பட வேண்டும் என எண்ணிச் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றோம் - ஞா.ஸ்ரீநேசன்

Report Print Navoj in அரசியல்

நாங்கள் இலஞ்சம், கொமிஷன் இல்லாமல் சரியாகச் செயற்பட வேண்டும் என எண்ணிச் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றோம். அவ்வாறு யாராவது செயற்படுவார்களாக இருந்தால் அவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குப் பொருத்தமில்லாதவர்களாகத் தான் இருக்க முடியும். அவர்களை மக்கள் இலகுவாக அடையாளப்படுத்தி, அவர்களுக்குச் சரியான தீர்ப்புக்களை வழங்குவார்கள் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார்.

இன்று சனிக்கிழமை ஏறாவூர்ப்பற்றுப் பிரதேச சபை உறுப்பினர் மு.முரளிதரனின் ஏற்பாட்டில் சித்தாண்டியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

“கையூட்டு கொடுப்பதும் தவறு, பெறுவதும் தவறு. இலஞ்சம் வாங்குதல், மக்களுக்கு சேரவேண்டியதில் இருந்து சூரையாடுதல் போன்ற விடயங்களுடன் சம்மந்தப்பட்ட பலருக்கு நாங்கள் நடவடிக்கை எடுத்திருக்கின்றோம்.

இந்தப் பிரதேசங்களில் பல்வேறு பாலங்கள் அமைப்பதற்கான முயற்சிகளை நாங்கள் மேற்கொண்டுள்ளோம். கிரன் பாலம், நரிப்புல் தோட்டம் பங்குடாவெளிப் பாலம், சந்திவெளி, கிண்ணையடி, மண்டூர் போன்ற பாலங்களை அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

வடக்கு கிழக்கு அபிவிருத்தி தொடர்பான ஜனாதிபதி செயலணியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் நாங்கள் கலந்து கொண்டோம். ஜனாதிபதியிடம் நேரடியாகப் பல விடயங்களைத் தெரிவித்திருக்கின்றோம். அந்த அடிப்படையில் கிழக்கில் இரண்டு தொழிற்சாலைகளைத் திறப்பதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதாக ஜனாதிபதி அவர்களே பகிரங்கமாகச் சொல்லியிருக்கின்றார். அதில் குறிப்பாக தேவபுரம் அரிசி ஆலை

தொடர்பில் சாதகமான கருத்துக்கள் இடம்பெற்றது. வாழைச்சேனைக் காகித ஆலையைக் தொடர்பில் கேட்ட போது காகித ஆலை இல்லாது விட்டாலும் வேறேதும் கைத்தொழிற் பேட்டையை அமைப்பதாக ஜனாதிபதி தெரிவித்திருக்கின்றார். இவ்வாறு பலவாறான விடயங்களை நாங்கள் ஆராய்ந்து செய்து கொண்டிருக்கின்றோம்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருக்கின்ற நாங்கள் எல்லோரும் இலஞ்சம், கொமிஷன் இல்லாமல் சரியாகச் செயற்பட வேண்டும் என எண்ணிச் செயற்பட்டுக்

கொண்டிருக்கின்றோம். அவ்வாறு யாராவது செயற்படுவார்களாக இருந்தால் அவர்கள் இந்தக் கட்சிக்குப் பொருத்தமில்லாதவர்களாகத் தான் இருக்க முடியும். தங்களின் பொக்கட்டுக்களை நிரப்பிக் கொள்வதற்காக யாராவது செயற்படுவார்களாக இருந்தால் அவர்களை மக்கள் இலகுவாக அடையாளப்படுத்தி, அவர்களுக்குச் சரியான தீர்ப்புக்களை வழங்குவார்கள்.

விவசாயிகள் கஷ்டப்பட்டு விளைச்சலைப் பெறுகையில் இடையில் இருப்பவர்கள் இலகுவாக அதனைக் கைமாறி உழைக்கின்றார்கள். அவ்வாறு இல்லாமல் ஒரு பெரிய அரிசி ஆலையை உருவாக்கும் போது அங்கு தொழில் வாய்ப்பும் உருவாகும், எமது விவசாய அறுவடைகளுக்கு நியாயமான சந்தைப் பெருமதி அல்லது விலை கிடைப்பதற்குரிய வாய்ப்பும் கிடைக்கும். அந்த வகையிலான நடவடிக்கைகளை நாங்கள் செய்து கொண்டிருக்கின்றோம்.

எதற்கெடுத்தாலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ன செய்கின்றது, செய்திருக்கின்றது என்றுதான் கேட்டுக் கொண்டிருக்கின்றார்கள். தமிழர்கள் தமிழப் பிரதேசங்கில் தனித்துவமாக இருப்பதற்கும், தமிழர் பிரதேசங்களை அந்நியர்கள் வந்து ஆக்கிரமதித்துக் கொள்ளாமல் இருப்பதற்குமான பல்வேறு வேலைத்திட்டங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செய்துகொண்டிருக்கின்றது சிலவற்றைச் செய்து வெண்டும் இருக்கின்றது. நாங்கள் ஆர்ப்பாட்டமும் செய்வதில்லை, ஆரவாரமும் செய்வதில்லை. செய்திகளுக்கு வருவதற்காக நாங்கள் வேலைகள் செய்வதில்லை.

ஆர்ப்பரித்து காரியங்களைச் செய்யும் போது சில வேளைகளில் கிடைப்பதும் இல்லாமல் போய்விடும். சத்தம் போட்டுச் செய்யும் காரியங்களும் உண்டு, ஓசைப்படாமல் செய்ய வேண்டிய காரியங்களும் உண்டு. எல்லாவற்றிற்கும் சத்தம் போட்டு தெருவில் நின்றோம் என்றால் எதிர்த்த தரப்பைத் தயார்படுத்துவது போல் ஆகிவிடும். அரசியலில் தந்திரமாகக் கையாளுகின்ற விடயங்களே சாத்தியப்படுகின்றன. விளம்பரத்துக்காகச் செய்தோமாக இருந்தால் அது அசாத்தியமாகவே போய்விடும்.” என்று தெரிவித்துள்ளார்.

Latest Offers