உயிர் பயம் இருந்தால் கோத்தபாய நாட்டை விட்டு வெளியே போகட்டும்

Report Print Jeslin Jeslin in அரசியல்

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவிற்கு கூடுதல் பாதுகாப்பு தேவையில்லை என அமைச்சர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் வைத்து நேற்றைய தினம் உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

எனக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பை விடவும் கோத்தாபய ராஜபக்சவுக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு அதிகம்.

எனக்கு, 17 பேர் பாதுகாப்புக்காக வழங்கப்பட்டுள்ளனர். ஆனால் கோத்தாபய ராஜபக்சவுக்கு, இராணுவம், சிறப்புப் படை, கொமாண்டோக்களை உள்ளடக்கிய 25 பேர் பாதுகாப்புக்காக வழங்கப்பட்டிருந்தனர் என்பது எனக்குத் தெரியும்.

ஒரு ஆர்ப்பாட்டத்தின் போது, அவருக்கு சிறப்பு அதிரடிப்படையினர் பாதுகாப்பு வழங்குவதை பார்த்தேன். இராணுவப் பாதுகாப்பு விலக்கப்பட்ட பின்னர், அவருக்கு காவல்துறை பாதுகாப்பு வழங்கப்பட்டது பற்றி எனக்குத் தெரியாது. ஆனால், அவருக்கு போதிய பாதுகாப்பு உள்ளது.

போரின் போது, அவரது பாதுகாப்புக்காக 500 படையினர் ஈடுபடுத்தப்பட்டனர். ஆனால் இப்போது, அதற்கு அவசியமில்லை, ஏனென்றால், நாட்டின் நிலைமை மாறி விட்டது.

முன்னாள் பாதுகாப்புச் செயலர் ஒரு சாதாரண குடிமகன் தான். அவர் அரசாங்கத்திலோ அல்லது வேறெந்த பொறுப்பிலுமோ உள்ள ஒருவரல்ல.

நாட்டின் அதிபருக்கோ, பிரதமருக்கோ வழங்கப்படுவது போல, அவருக்கு அமைச்சர்கள் பாதுகாப்பு பிரிவின் பாதுகாப்பு தேவையில்லை.

நான் அறிந்தவரையில் எந்தவொரு செயலருக்கும் ஓய்வுபெற்ற பின்னர் பாதுகாப்பு அளிக்கப்படவில்லை.

இந்த நாட்டில் பலருக்கு மரண அச்சுறுத்தல் இருக்கிறது. அவர்கள் எல்லோருக்கும் குண்டுதுளைக்காத வாகனங்களை வழங்கி பாதுகாப்பு அளிக்க நாட்டில் நிதி இல்லை.

கோத்தாபய ராஜபக்ச தனது உயிர் பற்றி அச்சம் கொண்டிருந்தால், நாட்டை விட்டு வெளியே போகலாம். அவர் ஒரு அமெரிக்க குடியுரிமை பெற்றவர் தானே என குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers