பதில் முதலமைச்சர் பதவி தமிழருக்கு! இறுதி கால பகுதியில் சம்பவம்

Report Print Thirumal Thirumal in அரசியல்

மத்திய மாகாணசபையின் இறுதி கால பகுதியில் பதில் முதலமைச்சர் பதவியினை ஒரு தமிழருக்கு கொடுத்த சம்பவத்தையிட்டு பெருமையடைவதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

நுவரெலியா மற்றும் அம்பகமுவ பிரதேச செயலகங்களுக்கு உட்பட்ட விவசாயிகளுக்கு நிதி உதவி மற்றும் விவசாய உபகரணங்கள் என்பன ஹட்டன், டிக்கோயா நகரசபை மண்டபத்தில் வைத்து நேற்று வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறுகையில்,

கடந்த காலங்களில் விவசாய உபகரணங்களை கொள்வனவு செய்வதற்கு 200 மில்லியன் ரூபா மாகாணசபையினால் ஒதுக்கப்பட்டு இருந்தது. இதனை மக்கள் முறையாக பயன்படுத்தாதன் காரணமாக இந்தமுறை 60 மில்லியன் ரூபாவாக குறைவடைந்துள்ளது.

அரசாங்கம் திட்டங்களை நடைமுறைபடுத்தும் போது அதனை மக்கள் வரவேற்காவிட்டால் அது இல்லாது போய்விடும். எனவே அரசாங்கம் மேற்கொள்ளும் திட்டங்களை முறையாக மக்கள் பயன்படுத்த பழகிக் கொள்ள வேண்டும்.

அதேசமயம் அரசாங்க திட்டங்கள் அனைத்தும் இலவசமாக கிடைக்கும் என்று எதிர்பார்க்கக்கூடாது. ஐம்பது வீதம் அரசாங்கமும் மீதியினை பயனாளிகளும் செலுத்த வேண்டும்.

அப்போது தான் அதன் பெறுமதி தெரியும். எல்லாவற்றையும் இலவசமாக கொடுத்தால் அதன் பெறுமதி தெரியாது. இந்த மத்திய மாகாணத்தில் பொருட்கள் வழங்கும் இறுதி நிகழ்வு இதுவாக இருக்கலாம்.

அரசாங்கத்தினால் வழங்கப்படுகின்ற அபிவிருத்தி திட்டங்களை எமது மக்கள் முழுமையாக பயன்படுத்தி பயன்பெற வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.