தமிழ் இளைஞர்கள் ஆயுதமேந்த காரணம் இதுவே! த.தே.கூட்டமைப்பின் சக்தியும் குறையும்

Report Print Rakesh in அரசியல்

தமிழ் மக்களின் கோரிக்கைகள் முதலாளித்துவ அரசுகளால் நிராகரிக்கப்பட்டதையடுத்தே தமிழ் இளைஞர்கள் ஆயுதமேந்தி மறவழியில் போராட துவங்கியதாக ஐக்கிய சோசலிச கட்சியின் தலைவர் சிறிதுங்க ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

தமிழர்களுக்கான அரசில் தீர்வுத்திட்டம் குறித்தும், கட்சியின் மாநாடு சம்பந்தமாகவும் ஊடகம் ஒன்றுக்கு அவர் வழங்கியுள்ள செவ்வியிலேயே இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

சுயாட்சி கோரி அறவழியில் போராடிய தமிழ் மக்களின் கோரிக்கைகள் முதலாளித்துவ அரசுகளால் நிராகரிக்கப்பட்டதையடுத்தே தமிழ் இளைஞர்கள் ஆயுதமேந்தி மறவழியில் போராட துவங்கினர்.

தமிழர்களின் ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்டதையடுத்து அப்போராட்டத்தை ஜனநாயக வழியில் அடுத்தகட்டத்துக்கு கொண்டு செல்ல வேண்டிய முக்கிய பொறுப்பு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இருந்தது.

எனினும், இந்த விடயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் உரிய வகையில் செயற்படவில்லை. அவர்களிடம் உறுதியான கொள்கை இருக்கவில்லை.

மத்திய அரசுகள் மீது வைத்த நம்பிக்கைக்கு பதிலாக, வீதியில் இறங்கி தொடர் போராட்டங்களை நடத்தியிருந்தால் கூட அனைத்துலக சமூகம் களமிறங்கியிருக்கக்கூடும்.

நல்லாட்சி எனக் கூறப்படும் அரசு பின்னால் கூட்டமைப்பு சென்றது. அதை தருமாறும், இதை வழங்குமாறும் கேட்டது. இறுதியில் எதுவும் நடப்பதாகத் தெரியவில்லை.

அடுத்த மாதம் ஆரம்பமானதும் வரவு செலவுத்திட்டம் குறித்தும், ஆட்சிக்கவிழ்ப்பு குறித்துமே பேசப்படும். முஸ்லிம் கட்சிகள் மஹிந்த பக்கம் தாவக்கூடும்.

அவ்வாறானதொரு சூழ்நிலையில் புதிய அரசியலமைப்பு பற்றியோ அல்லது தீர்வுத்திட்டம் சம்பந்தமாகவே பேசுவதற்கு இடமேயில்லை. அத்துடன், கட்சி தாவல்களால் கூட்டமைப்பின் பேரம் பேசும் சக்தியும் குறைவடையும்.

இலங்கை சுதந்திரமடைந்த பின்னர் ஆட்சிக்கு வந்த எந்தவொரு அரசுகளாலும் இனப்பிரச்சினைக்கு தீர்வுகாண முடியாமல்போனது.

தமிழர்களுக்கு சுயநிர்ணய உரிமை அவசியம் என்பதை எமது கட்சியே அன்றுமுதல் இன்றுவரை வலியுறுத்தி வருகின்றது.

பிரிந்து செல்வதா அல்லது கூட்டாக இருப்பதா என்பது குறித்து ஸ்கொட்லாந்து மக்களிடையே கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது. அதுதான் உயரிய ஜனநாயம்.

அந்தப் பாணியில் வடக்கு, கிழக்கு மக்களிடையே கருத்துக் கணிப்பு நடத்தப்பட வேண்டும். இதை வலியுறுத்தி எமது கட்சி மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்படவுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers