தொண்டமானை தாக்கும் அமைச்சர் திகாம்பரம்

Report Print Steephen Steephen in அரசியல்

முன்னாள் அமைச்சர் சௌமியமூர்த்தி தொண்டமான் தற்போது உயிருடன் இருந்தால், அவரது உறவினர்கள் மேற்கொண்டு வரும் ஊழல், மோசடிகள் காரணமாக இதயம் வெடித்து இறந்து போயிருப்பார் என அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.

நுவரெலியா - கந்தபளை, கோட்லோஜ் தோட்டத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள 24 வீடுகளை கொண்ட பாக்கிய புரம் புதிய கிராமத்தை இன்று மக்களிடம் கையளிக்கும் நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

தேசிய கால்நடை வள அபிவிருத்திச் சபையின் தலைவர் முத்து விநாயகம் 6 லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சபைக்கு சொந்தமான குருணாகல் மெல்சிறிபுரவில் உள்ள பண்ணையில் இருக்கும் உணவகத்தை இரண்டு வருடங்கள் வாடகைக்கு கொடுக்க முத்து விநாயகம் 12 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். அதில் 6 லட்சம் ரூபாயை பெற்றுக்கொண்டுள்ளார்.

முத்து விநாயகம், ஊவா மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமானின் தந்தை. ஆறுமுகன் தொண்டமானின் மைத்துனர். முன்னாள் அமைச்சர் சௌமியமூர்த்தி தொண்டமானின் உறவினர்.

சௌமியமூர்த்தி தொண்டமான் மலையக தமிழ் மக்களுக்கு ஓரளவு சேவைகளை செய்தார். அவரது பேரன் ஆறுமுகன் தொண்டமான் மற்றும் கொள்ளு பேரன் செந்தில் தொண்டமான் ஆகியோர் மலையக மக்களுக்கு எந்த சேவைகளையும் செய்யாது லஞ்சம் பெற்று தவறான செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

தேசிய கால்நடை வள அபிவிருத்திச் சபையின் தலைவராக முத்து விநாயகம் நியமிக்கப்பட்ட போது, ஜனாதிபதியின் கோரிக்கைக்கு அமைய அவரை தான் நியமிப்பதாக அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா கூறினார்.

இலஞ்சம் பெற்ற பெற்ற இந்த நபருக்கு எதிராக கடுமையாக சட்டத்தை அமுல்படுத்த வேண்டும். எனது அமைச்சின் கீழ் உள்ள எவருக்கும் இப்படியான நடவடிக்கைகளில் ஈடுபட இடமளிக்க போவதில்லை. நானும் அப்படியான நடவடிக்கைகளில் ஈடுபடுவதில்லை.

அத்துடன் தோட்ட முதலாளிமார் சம்மேளத்துடன் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பான உடன்படிக்கையை காட்டிக்கொடுத்து இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் ஆறுமுகன் தொண்டமான் பணத்தை பெற்றுக்கொள்கிறாரோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது எனவும் அமைச்சர் திகாம்பரம் குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers