தமிழ் மக்களின் பலம் தமிழ் தலைமைகளின் சுயநல அரசியலால் பலவீனமடைகின்றது

Report Print Nesan Nesan in அரசியல்

அடக்கு முறைகளுக்கு உள்ளாகும் தமிழ் மக்களின் பலம், தமிழ் தலைமைகளின் சுயநல அரசியல் மற்றும் குழுவாத போக்குகளால் மேலும் பலவீனமடைந்துள்ளதாக புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் கே.இன்பராசா தெரிவித்துள்ளார்.

புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சியின் அரசியல் நிலைப்பாடு தொடர்பாக அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு வவுனியா றம்பைக்குளம் ஆதி மண்டபத்தில் நேற்று நடைபெற்றுள்ளது. இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில்,

“2009 ஆண்டு முள்ளிவாய்காலில் ஊர்வலமாக வந்த பின்பும் கூட தமிழ் அரசியல் தலைமைகள் என்று கூறிக் கொள்வோர் மக்கள் போராட்டங்களை முன்னெடுக்க முன்வரவில்லை. அதனால் இன்று மக்களே போராடி வருகிறார்கள்.

அடக்குமுறைகளுக்கு உள்ளாகும் தமிழ் மக்களின் பலம், தமிழ் தலைமைகளின் சுயநல தேர்தல் அரசியல் மற்றும் குழுவாத போக்குகளால் மேலும் பலவீனமடைந்துள்ளது.

இதனால் தமிழர் அரசியலில் வெறுமை ஏற்பட்டிருப்பதுடன் மக்களை அரசியல் மயப்படுத்தி, அரசியல் போராட்ட சக்தியினை இளையோர் மத்தியில் ஏற்படுத்துவதில் போரிற்கு பின்பாக வடக்கு, கிழக்கு தவறியுள்ளமையினை காணமுடிகிறது.

இன்றைய சூழலில் ஜனநாயக உரிமைகளை வென்றெடுத்தலுடன், சுயநிர்ணய உரிமையை நிலைநாட்ட அனைவரும் ஓரணியில் ஒன்று திரள்வது அவசியம்.

அதிகார சக்திகளிடம் அடிபணிதலுக்கு சாத்தியமே இல்லை என்கின்ற அடிப்படையிலும் எமது அரசியல் நிலைப்பாட்டில் எந்தவித சமரசமும் மாற்று அமைப்புடன் வைத்து கொள்வதில்லை என்ற புரிதலுடன் நாம் செயற்பட்டு வருகின்றோம்.

எமது மக்களின் வலிகளை நாம் உணர்ந்ததன் வெளிப்பாடே எம்மை ஆயுதம் ஏந்தவைத்தது. எமது மக்களிற்கான அரசியல் நெருக்கடிகள் யாவும் தொடர்ந்த வண்ணமே இருக்கிறது.

அந்த அடிப்படையிலேயே எமது கட்சி சரியான அரசியல் தெளிவு நிலையை இளையோர் மத்தியில் ஏற்படுத்த அனைத்து தரப்பினரையும் உள்வாங்கி செயற்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.

Latest Offers