20வது திருத்தச் சட்டமூலத்தை நிறைவேற்ற சர்வஜன வாக்கெடுப்பு அவசியம் - உயர்நீதிமன்றம் தீர்ப்பு

Report Print Rakesh in அரசியல்

நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை முற்றாக ஒழிக்கக் கோரும் அரசியலமைப்பின் 20வது திருத்தச் சட்ட மூலத்திலுள்ள சில சரத்துகளை நிறைவேற்றுவதற்கு சர்வஜன வாக்கெடுப்பும், நாடாளுமன்றில் மூன்றிலிரண்டு பெரும்பான்மையும் அவசியம் என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

நாடாளுமன்றம் இன்று முற்பகல் ஒரு மணிக்கு பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தலைமையில் கூடியது. சபாநாயகர் அறிவிப்பு வேளையிலேயே உயர்நீதிமன்றத்தின்மேற்படி தீர்ப்பை அவர் சபைக்கு அறிவித்துள்ளார்.

உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பின்பிரகாரம், 20வது திருத்தச் சட்டமூலத்திலுள்ள 2 இலிருந்து 23 வரையான சரத்துகளையும், 15ம், 16ம், 19ம், 20ம், 21ம், 22ம் சரத்துகளையும் நிறைவேற்றுவதற்கு சர்வஜன வாக்கெடுப்பும், மூன்றிலிரண்டு பெரும்பான்மையும் அவசியமாகும்.

23ம், 24ம், 28ம், 29ம், 31ம், 32ம், 34ம், 35ம், 36ம், 37ம் சரத்துகளை நிறைவேற்றுவதற்கு அரசியலமைப்பின் 84 - 2ம் பிரிவின் கீழ் விசேட பெரும்பான்மை மற்றும் மக்கள் கருத்துக் கணிப்பு அவசியம் என உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது. ஏனைய சில சரத்துகளுக்கும் இத்தீர்ப்பு ஏற்புடையதாக இருக்கின்றது.

அரசியலமைப்பின் 20வது திருத்தச் சட்டமூலம் ஜே.வி.பியால் முன்வைக்கப்பட்டது. அதற்கு எதிராக பொது எதிரணியும், சில அமைப்புகளும் உயர்நீதிமன்றத்தில் மனுக்களைத் தாக்கல் செய்திருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Offers