கிழக்கில் தமிழர் தரப்பில் புதிய அரசியல் கட்சி உதயம்!

Report Print V.T.Sahadevarajah in அரசியல்

கிழக்கில் புதிய அரசியல் கட்சிக்கான பிள்ளையார் சுழி இடப்பட்டுள்ளது. அதற்கு கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

கிழக்குத் தமிழர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் தமிழர் விடுதலைக் கூட்டணி, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி, ஈழ மக்கள் ஜனநாயக்கட்சி, தமிழர் சமூக ஜனநாயகக்கட்சி, அகில இலங்கை தமிழர் மகா சபை ஆகிய ஐந்து தமிழ் அரசியல் கட்சிகளும் 05.10.2010 அன்று ஒன்று கூடி 'கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு' எனும் பெயரில் புதிய அரசியல் கூட்டணியொன்றை உருவாக்கியுள்ளன.

எதிர்வரும் கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் கிழக்கு மாகாணத் தமிழர்களின் சார்பில் அதி உச்சபட்ச உறுப்பினர்களைப் பெற்றுக் கொள்ளும் வகையில் அனைத்துத் தமிழ் அரசியல் கட்சிகளையும் ஒரு பொதுச் சின்னத்தின் கீழ் ஓரணியில் போட்டியிட வைப்பதற்காகக் கிழக்குத் தமிழர் ஒன்றியம் எடுத்துக் கொண்ட முயற்சியின் ஒரு முக்கிய கட்டமாக இந்த அரசியல் கூட்டணி உருவாகியுள்ளது.

கொழும்பில் நடைபெற்ற சந்திப்பில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி, ஈழமக்கள் ஜனநாயக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா மற்றும் அவருடன் ஊடகச் செயலாளர் முருகன் (ஸ்டாலின்), தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் துணைத் தலைவர் க.யோகவேள், தமிழர் சமூக ஜனநாயகக்கட்சியின் தலைவர் தி.சிறிதரன் மற்றும் அகில இலங்கைத் தமிழ் மகா சபையின் தலைவர் கலாநிதி கா.விக்கினேஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கிழக்குத் தமிழர் ஒன்றியத்தின் சார்பில் அதன் ஸ்தாபகர்களில் ஒருவரும் மாகாண இணைப்பாளர்களில் ஒருவருமான செங்கதிரோன் த.கோபாலகிருஸ்ணன், மட்டக்களப்பு மாவட்டச் செயற்குழு தலைவர் பேராசிரியர் மா.செல்வராசா, கலாநிதி சு.சீவரெத்தினம், மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான ஞா.கிருஸ்ணபிள்ளை (வெள்ளிமலை), கிழக்குத் தமிழர் ஒன்றியத்தின் அம்பாறை மாவட்டச் செயற்குழுத் தலைவரும் ஆலையடிவேம்பு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளருமான இரா.நடராசா, கிழக்குத் தமிழர் ஒன்றியத்தின் திருகோணமலை மாவட்டச் தலைவர் பூ.உகநாதன் மற்றும் பொருளாளர் தி.ஹரிஸ்ரன் ஆகியயோர் கலந்து கொண்டனர்.

புரிந்துணர்வு ஒப்பந்தச் செயற்பாடுகளை முன்னெடுக்கும் இணைப்பாளராகச் செங்கதிரோன் த.கோபாலகிருஸ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார்.

அத்துடன் கிழக்குத் தமிழர் ஒன்றியத்தினால் முன்வைக்கப்பெற்ற பின்வரும் வேண்டுகோள்களும் பங்காளி கட்சிகளினால் ஒரு மனதாக ஏற்றுக் கொள்ளப்பெற்றன.

இந்த அரசியல் கூட்டு அணியின் (கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு) செயற்குழுவுக்கான உறுப்பினர்களைப் பங்காளிக் கட்சிகள் நியமிக்கும் போது அந்தந்தக் கட்சிகள் கிழக்குத் தமிழர் ஒன்றியத்தின் உறுப்பினர்களைத் தங்கள் கட்சி உறுப்பினர்களாக்கி அவர்களை ஐம்பது வீதத்துக்குக் குறையாமல் தெரிவு செய்யும் போது இந்த அரசியல் கூட்டு அணியின் கட்டுப்பாட்டையும் பொறுப்புக்கூறலையும் பொதுமக்களிடம் கொண்டு செல்வதற்கு கிழக்குத் தமிழர் ஒன்றியத்திற்குச் சாதகமானதாக இருக்கும்.

இந்த அரசியல் கூட்டு அணியின் (கிழக்கு தமிழர் கூட்டமைப்பு) பதவியாளர்கள் கிழக்குத் தமிழர் ஒன்றியப் பிரதிநிதிகளாக இருப்பது நல்லது.

ஆகக் குறைந்த பட்சம் தலைவர் அல்லது செயலாளர் பதவிகளையாவது கிழக்குத் தமிழர் ஒன்றியப் பிரதிநிதிக்கு வழங்குதல் பொருத்தப்பாடுடையதாகும்.

வேட்பாளர்கள் தெரிவின் போது ஒவ்வொரு பங்காளிக் கட்சிகளும் பொது மக்களிடமிருந்து வேட்பாளர்களைத் தெரிவு செய்வதற்கான ஒரு பொறிமுறையை உருவாக்கி அதன்படி செயற்படுவது எமது இலக்கை இலகுவாக்கும்.

ஏனவே இக்கூட்டமைப்பிற்கான முயற்சியின் முதற்கட்டமாக அனைத்துத் தமிழ் அரசியல் கட்சிகளையும் கிழக்குத் தமிழர் ஒன்றியம் தனித்தனியே சந்தித்துப் பேசியது.

அடுத்தகட்டமாக கடந்த 22ஆம் திகதி களுவாஞ்சிக்குடி இராசமாணிக்கம் மண்டபத்தில் அனைத்துத் தமிழ் அரசியல் கட்சிகளையும் ஓரிடத்தில் கூட்டிக் கலந்துரையாடியது.

இக் கலந்துரையாடல் கூட்டத்தில் எட்டப்பெற்ற தீர்மானத்திற்கமைய கிழக்குத் தமிழர் ஒன்றியம் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றைத் தயாரித்து அதன் நகல் வடிவத்தினை அனைத்துத் தமிழ் அரசியல் கட்சிகளினதும் பார்வைக்கு அனுப்பி வைத்து அவற்றின் பின்னூட்டல்களைக் கோரியிருந்தது.

இந்தப் பின்னணியிலேயே தங்கள் சம்மதத்தைத் தெரிவித்த மேற்படி ஐந்து கட்சிகளும் கொழும்பில் கிழக்குத் தழிழர் ஒன்றியத்தின் திருகோணமலை மாவட்டச் செயற்குழுவின் தலைவர் பூ.உகநாதன் இல்லத்தில் ஒன்றுகூடி புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் உள்ளடக்கத்தினையிட்டு விரிவாகக் கலந்துரையாடி அதன் நகல் வடிவத்தில் அவசியமான திருத்தங்களை மேற்கொண்டு புரிந்துணர்வு ஒப்பந்தத்தினை இறுதிப்படுதியுள்ளன.

எனினும் இதுவரை தங்கள் சம்மதத்தைத் தெரிவிக்காத தமிழ் அரசியல் கட்சிகளான இலங்கைத் தமிழ் அரசுக்கட்சி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி, தமிழீழ விடுதலை இயக்கம் ஆகிய ஐந்து கட்சிகளுக்கும் தங்கள் நிலைப்பாடுகளைத் தெரிவிக்க நல்லெண்ண அடிப்படையில் எதிர் வரும் 17ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கும் கடிதங்களைக் கிழக்குத் தமிழர் ஒன்றியம் அனுப்பி வைத்துள்ளது.

மேலும், தேர்தல் திணைக்களத்தினால் இதுவரை அங்கீகரிக்கப்படாத ஆனால் தமிழ் மக்களிடையே அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ள தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி, ஈரோஸ் ஜனநாயக முன்னணி, ஜனநாயகப் போராளிகள் கட்சி, புனர்வாழ்வளிக்கப்பட்ட போராளிகள் கட்சி என்பன கிழக்குத் தமிழர் ஒன்றியத்தின் அரசியல் செயற்பாட்டிற்கு ஆதரவளிக்க முன்வந்துள்ளன.

அடுத்த கட்டமாக இத்தகைய இதுவரை தேர்தல் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டு அங்கீகரிக்கப்படாத தமிழ் அரசியல் கட்சிகளுடனும் தேசியக் கட்சிகளில் இணைந்து அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ள தனிநபர்களுடனும் மிக விரைவில் நல்லெண்ணப் பேச்சுவார்த்தைகளில் கிழக்குத் தமிழர் ஒன்றியம் ஈடுபடவுள்ளதாகத் தெரியவருகிறது.

எது எப்படியிருப்பினும் குறிப்பிட்ட காலச் சட்டகத்திற்குள் 'கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு' எனும் புதிய இவ் அரசியல் கூட்டணியை தேர்தல் திணைக்களம் அங்கீகரித்து அதற்கெனப் புதிய சின்னம் ஒன்றினைப் பெற்றுக் கொள்ளும் செயற்பாடுகளைத் துரிதப்படுத்த வேண்டியுள்ளதால் எதிர்வரும் 20ஆம் திகதி தமிழ் கட்சிகளுக்கிடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் மட்டக்களப்பில் கைச்சாத்திடப்படுவதுடன் அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்காக தேர்தல் ஆணைக்குழுவிடம் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்படவுள்ளது என அறியக் கிடக்கிறது.

Latest Offers