தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கோரிக்கை விடுத்த அரசியல் கைதிகள் !

Report Print Thileepan Thileepan in அரசியல்

வரவு செலவுத்திட்டத்திற்கு ஆதரவளிப்பதற்கான நிபந்தனைகளில் எமது விடுதலையை பிரதான விடயப்பொருளாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உட்பட அனைத்து தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களும் முன்வைக்க வேண்டும் என உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தமிழ் அரசியல் கைதிகள் கோரிக்கை முன்வைத்துள்ளதாக வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

கொழும்பு மகசீன் சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தமிழ் அரசியல் கைதிகளை பார்வையிடுவதற்கு நேரில் சென்றிருந்த போதே மேற்படி கோரிக்கை விடுத்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இது குறித்து தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தமிழ் அரசியல் கைதிகளின் நிலைமைகள் நாளுக்கு நாள் மோசமடைந்து வருகின்றது.

அவர்கள் தொடர்பிலான அரசியல் தீர்மானமொன்றை எடுப்பதை தவிர்த்து தொடர்ச்சியாக காலங்கடத்திச் செல்ல முடியாது. நீண்டகாலமாக சிறைகளில் தமது காலத்தினை கழித்துள்ள அவர்களின் எஞ்சிய சொற்பகாலமாவது அவர்களின் உறவினர்களுடன் செலவிடவே விரும்புகின்றார்கள்.

மகசீன் சிறைச்சாலையில் ஏழு அரசியல் கைதிகள் 09 ஆண்டுகளுக்கும் அதிகமான காலம் தடுத்து வைக்கப்பட்டுள்ள போதும் அவர்கள் மீது இதுவரையில் எவ்விதமான வழக்குகளும் தாக்கல் செய்யப்படவில்லை.

இதனை விட மட்டக்களப்பினைச் சேர்ந்த ஒருவர் 26 ஆண்டுகளுக்கும் அதிகமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக கண்ணீருடன் என்னிடத்தில் கூறினார்.

இவர்களை விடவும் வழக்கு தாக்கல் செய்யப்பட்டவர்கள் கூட உரிய முறையில் அவர்களின் வழக்குகள் விசாரணைக்கு உட்படுத்தப்படாது 10, 15 ஆண்டுகள் என சிறையில் வாடுகின்ற நிலைமையே காணப்படுகின்றது.

ஆகவே அவர்களின் நியாயமான கோரிக்கைக்கு அரசாங்கம் உரிய பதிலளிக்க வேண்டியது கட்டாயமாகின்றது.

எதிர்வருக்கின்ற வரவு செலவுத்திட்டத்தினை நிறைவேற்றுவதற்கு தமிழ் தரப்பினரின் ஆதரவை அரசாங்கம் கோருமாயின் அதற்கான பிரதான நிபந்தனையாக தமது விடுதலையை முன்வைக்க வேண்டும் என அவர்கள் என்னிடத்தில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அத்துடன் அனைத்து தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களையும் ஒன்றிணைத்து அரசாங்கத்துக்கு அழுத்தமளிப்பதற்கான முயற்சிகளையும் மேற்கொள்ளுமாறும் கோரிக்கை விடுத்தனர்.

எமது கட்சியான ஈழமக்கள் புரட்சிகர முன்னணி அக்கோரிக்கைகளை ஏற்றுக்கொள்வதோடு, தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக அரசியல் கட்சி பேதமின்றி செயற்பட என்றுமே தயராக இருக்கின்து என்பதையும் சுட்டிக்காட்டியிருந்தேன்.

இனவிடுதலைக்கான போராட்டத்தின் போது கைதிகள் பரிமாற்றம், பொதுமன்னிப்பு போன்ற விடயங்கள் அனைத்தும் நிகழ்ந்திருக்கின்றன.

ஆகவே தமிழ் அரசியல் கைதிகள் அனைவரும் விடுதலை செய்யப்படுவதற்காக பொதுவேலைத்திட்டமொன்று தயாரிக்கப்பட்டு அரசியல் ரீதியான தீர்மானம் எடுப்பதற்கு அனைத்து அரசியல் கட்சிகளும் இணைவேண்டும் என்பது எமது நிலைப்பாடாகும்.

நல்லிணக்கம் பற்றி பேசப்படுகின்றது. அதற்கு உதாரணமாக தென்னாபிரிக்காவை அடிக்கடி சுட்டிக்காட்டப்படுகின்றது. ஆகவே அந்த அனுபவங்களின் பிரகாரம் அரசாங்கம் இதயசுத்தியுடன் செயற்பட வேண்டும் என்று வலியுறுத்துகின்றேன் என்றார்.

Latest Offers