வடக்கு, கிழக்கில் புத்தர் சிலைகள்! அமைச்சரொருவர் அம்பலப்படுத்தியுள்ள தகவல்

Report Print Steephen Steephen in அரசியல்

தெற்கில் இருந்து செல்லும் நபர்களே வடக்கு, கிழக்கில் உள்ள புத்தர் சிலைகளை சேதப்படுத்துவதாக அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். அவர் இதன்போது மேலும் கூறுகையில்,

தெற்கில் இருந்து சென்ற சிலர் வேண்டும் என்றே புத்தர் சிலைகளை சேதப்படுத்தி, அதனை புகைப்படம் எடுத்து தெற்கிற்கு கொண்டு வந்து காட்டி, வடக்கில் புத்தர் சிலைகளை வைக்க முடியாத நிலைமை இருப்பதாக காட்ட முயற்சிப்பதாக நான் நம்புகிறேன்.

வடக்கு, கிழக்கு ஆகிய இரண்டு மாகாணங்களுக்கு நான் தனிப்பட்ட ரீதியில் விஜயம் செய்தேன். குறிப்பாக வவுனியாவுக்கு சென்றிருந்த போது, சில இடங்களில் புத்தர் சிலைகள் மீது தார் பூசப்பட்டிருந்தது.

வேறு சில இடங்களில் புத்தர் சிலைகள் சேதப்படுத்தப்பட்டிருந்தன. இது குறித்து தேடிப்பார்த்த போது இவற்றில் பல புத்தர் சிலைகள் தற்காலிக இராணுவ அரண்கள் இருந்த இடங்களில் வைக்கப்பட்டிருந்தவை.

இராணுவ அரண்கள் அமைக்கப்பட்ட போது தற்காலிகமாக புத்தர் சிலைகளை வைக்குமாறு பிரதேச பௌத்த பிக்கு சபையினர் ஆலோசனை வழங்கியிருந்ததுடன், அவற்றை நிரந்தரமாக ஸ்தாபிக்க வேண்டாம் எனவும் அறிவுறுத்தியிருந்தனர்.

தற்காலிக இராணுவ அரண்கள் அப்புறப்படுத்தப்பட்ட போது, புத்தர் சிலைகளை மட்டும் அங்கு வைத்து விட்டு சென்றுள்ளனர்.

சிலைகளை வைத்து விட்டு வந்த பின்னர் சிலர் தாரை பூசி இருக்கலாம். இதனை தவிர வடக்கு, கிழக்கில் புத்தர் சிலைகளுக்கு சேதம் ஏற்படுத்தும் சம்பவங்கள் எதுவும் நடக்கவில்லை என்பதையே கூற முடியும் என விஜயதாச ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers